Switch Language:   English | தமிழ்

    சுற்றுலாவின் பயன்கள்

    சுற்றுலாச் செல்வது ஒரு கலை. இன்பப் பொழுதுபோக்குடன் ஏற்ற மிகு பயனையும் தரவல்லது அது. நாம் கிணற்றுத் தவளைகளாக ஓரிடத்தில் மட்டும் வாழ்தல் கூடாது. பல்வேறு இடங்களுக்கு செல்வதும், பல்வேறு மக்களை காண்பதும் நமது அறிவை விருத்தி செய்து கொள்ள உதவும். புதிய புதிய அனுபவங்களை பெற்றிட முடியும். இன்று அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உலகம் பெரிதும் சுருங்கி விட்டது. இதனால் உலக மக்கள் அனைவரதும் வாழ்க்கை முறைகளை, பண்பாடுகளை நாம் அறிந்து கொள்ள சுற்றுலா பெரிதும் பயன்படும்.

    இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை அழகுகள், இயற்கை காட்சிகள்; கண்ணையும் கருத்தையும் கவரும் தன்மையுடையன. அவை அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பனவல்ல. பாய்ந்து செல்லும் ஆறுகள், பரந்து விரிந்த கடல்கள், மலைக்காட்சிகள், மண்ணின் வளங்கள், குகைகள், கோட்டைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் நாம் காணமுடியாது. பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்வதன் மூலமே இவற்றை நாம் பார்த்திட முடியும்; மனதில் பதித்திட முடியும்.

    நாகரிகமும் பண்பாடும் நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், மொழிக்கு மொழி மாறுபடும். வேற்றுமைகளில் ஒற்றுமை காண்பதே மனிதப் பண்பு. வளரும் உலகில் சுற்றுலாவின் மூலமே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டாகும்.

    உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி நாம் சுற்றுலாவை மேற்கொள்ளும் போது அது குறித்து நாம் திட்டமிட வேண்டும். மாவட்ட மட்டத்திலோ, தேசிய அளவிலோ அவரவர் வாய்ப்புக்கும் வசதிக்கும் ஏற்ப சுற்றுலாவை மேற்கொள்ளலாம். சுற்றுலாவை மேற்கொள்ளும் போது செல்லும் இடங்களின் சிறப்புக்களையும், பண்பாட்டு முறைகளையும் நன்கு அவதானித்துக் கொள்ள வேண்டும். பண்பாட்டுச் சின்னங்களைப் பார்வையிடுவதன் மூலம் பல்வேறு பண்பாட்டு முறைகளை அறிந்திட வழிபிறக்கும்

    உலக நாடுகளில் சுற்றுலாத்துறைக்கு இன்று முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. சுற்றுலாச் செல்வது ஒரு கலையாகவே கணிக்கப்படுகின்றது. சுருங்கக்கூறின் சுற்றுலாவின் மூலம் நமது அறிவு விருத்தியடைகிறது. உள்ளம் மகிழ்ச்சியடைகின்றது. 'யாதூம் ஊரே யாவரும் கேளீர்' என்னும் உன்னத நிலை உருவாகிறது.

    சுற்றுலாத்துறையின் மூலம் நாடுகள் தமது வருமானத்தை பெருக்கிக் கொள்கின்றன. உல்லாசப் பயணிகளைத் தத்தம் நாடுகளுக்கு அழைப்பு விடுகின்றன. அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொள்ள உல்லாசப் பயணத்துறையைப் பயன்படுத்துகின்றன. நவீன போக்குவரத்து வசதிகள் பெருகியுள்ள இக்காலகட்டத்தில் சுற்றுலாத்துறை பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

    உலக மக்கள் அனைவரையும் ஒரே குடும்பத்தினராக இணைத்திடும் வகையில் சுற்றுலாத்துறை இன்று வளர்ச்சி பெற்றுள்ளது. அதன் பயன்களை அறிவதும், அவற்றைத் தக்க வகையில் பயன்படுத்துவதும் நமது கடமையாகும்.