Switch Language:   English | தமிழ்

    பொறுமையைப் பேணுவோம்

    மனித வாழ்வில் பொறுமை பேணல் முக்கியமான, சீரிய பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மனித வாழ்வுக்கும் உயர்ச்சிக்கும் பொறுமை அடிப்படையாக அமைகின்றது. பொறுமை பேணியோர் பலர் தம் வாழ்வில் உயர்வடைந்தமையை வரலாறுகள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. புராண, இதிகாசங்களிலும் இதற்கான சான்றுகளை நாம் காண முடியும்.

    பொறுமையுடையோர் தம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துக் கொள்வர். அவர்களது வாழ்வு வளம் பெறும். 'பொறுத்தார் உலகாள்வார்' என்னும் முதுமொழி இதனையே எடுத்துக் காட்டுகிறது. பொறுமையுடைமை சீரய பண்பாகக் கருதப்படுகிறது. இதனாலேயே சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுவதற்குப் பொறுமை பேணல் அவசியமென வலியுறுத்தப்படுகிறது.

    பொறுமை இழந்தோர் பெருந் துன்பங்களுக்கு இலக்காவர். 'நன்றும் தீதும் பிறர்தர வாரா' என்பது சங்ககாலச் சான்றோர் வாக்கு. பெருமையும், சிறுமையும் தான் தர வருவனவேயன்றிப் பிறர்தர வருவனவல்ல என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பெருமையும், சிறுமையும் நம் கையிலேயே தங்கியுள்ளது. பெருமை பெறுவோர் பொறுமையுடையோராக, பணிவுடையோராக விளங்குவர். பொறுமை என்பது அவர்தம் அணிகலமாக விளங்குவதைக் காணலாம்.

    பொறுமை பேணுவோர் அடக்கமுடையவராகக் காணப்படுவர். மனம்,மொழி,மெய் என்னும் மூன்று வகையாலும் பணிவுடையவராக, அடக்கமுடையவராக இருப்பர். அவர்களது செயல்கள் யாவும் பொறுமையை அடிப்படையாகக் கொண்டனவாக அமைதலைக் காணலாம்.

    'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்' என்பது வள்ளுவர் வாக்கு. பொறுமை பேணுவோரே பெருமை பெறுவர் என்பதையும், வாழ்வில் உயர்வடைவர் என்பதையும் வள்ளுவரது குறள்கள்  பல வலியுறுத்துவதைக் காணலாம்.

    இதிகாச, புராண வரலாறுகளை நோக்குவோமாயின் பொறுமைக்குணம் கொண்டோர் தம் வாழ்வில் வெற்றி கொண்டமையும், பொறுமை பேணாதோர் ஈற்றில் தோல்விகளையே சந்தித்துக் கொணடமையையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

    பொறுமை காத்த பஞ்சபாண்டவர்கள் வெற்றி கொண்டமையையும், பொறுமை குணமற்ற கெளரவர்கள் தோல்வி கண்டமையையும் மகாபாரதக்கதை நமக்க நன்கு புலப்படுத்துகின்றது. வணங்காமுடியோன் என அழைக்கப்பெற்ற துரியோதனன் தன் வாழ்வில் பொறுமை பேணாமையாலேயே அழிந்தான். பொறுமை பேணுதலே வெற்றிக்கு அடிப்படை என்பதை நன்குணர்ந்த பாண்டவர்கள் அதனை இறுதிவரை பேணியதன் மூலமே இறுதியில் வெற்றி கொண்டனர். பொறுமையே அவர்களது வெற்றிக்கு அடிப்படை என்பதை இதன்மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

    மாணவர்களாகிய நாம் பாடசாலை வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் பொறுமையை கடைப்பிடித்து ஒழுக வேண்டும். பொறுமை பேணுவதன் மூலமே உயர்வு காணமுடியும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். பொறுமை பொன் போன்றது. பொறுமைப் பண்பை நமது நாளாந்த வாழ்வில் சீராக கடைப்பிடிப்போமாயின் நமது எதிர்காலம் சிறப்படைய முடியும் என்பது திண்ணம். பொறுமையற்றவர்களைச் சமூகம் பெரிதும் மதிப்பதில்லை. பொறுமையுடையோரையே சமூகம் மதித்துக் கெளரவிக்கும். இந்த உண்மையை நாம் என்றும் மனதிற் கொண்டு செயற்பட வேண்டும்.

    சுருங்கக்கூறின் பொறுமை பொக்கிசம் போன்றது. அதனைப் பேணிப் பாதுகாப்பதன் மூலமே மக்கள் உயர்வு காணமுடியும். மனித வாழ்வுக்கும், உயர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் பொறுமை பண்பை நமது வாழ்வில் என்றும் பேணுதல் வேண்டும். இதன் மூலமே சமூக வாழ்வில் நாம் உயர்வடைய முடியும். பொறுமையைப் பேணுவோம்! வாழ்வில் உயர்வு காண முயல்வோம் என நாமனைவரும் உறுதி கொள்வோமாக!