Switch Language:   English | தமிழ்

    ஆட்கொல்லி தங்கம்

    ஒரு வனத்தில் ஒரு சாமியார் மூச்சுத்திணற ஓடிக் கொண்டிருந்தார். அவரை யாரும் துரத்தவில்லை. அவருடைய நடத்தை அருகிலிருந்த மூன்று திருடர்களுக்கு வியப்பை உண்டு பண்ணியது. அவர்கள் சாமியாரைப் பிடித்து வந்து காரணம் வினவினர். பயத்திலே நடுங்கி நின்ற சாமியார் தன்னைச் ‘சாவு’ துரத்துவதாகக் கூறினார். திருடர்கள் சாமியாரைப் பைத்தியம் என்று எண்ணினர். அந்த சாவைக் காட்டுமாறு அவர்கள் சாமியாரைப் பணித்தனர்.

     சாமியார் அவர்களை அழைத்துச் சென்று ஒரு குகையைக் காண்பித்தார். பயங்கரமான தனிமையில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் குகை நிறையத் தங்கம் இருந்தது. தங்கத்தைப் பகிர்ந்து கொள்ள திருடர்கள் எண்ணினர். ஆனால் அவர்களை பசி வாட்டியது. அவர்கள் தம்மில் ஒருவனை உணவு வாங்கி வர அருகில் உள்ள ஒரு நகருக்கு அனுப்பினர். அவன் உணவுடன் திரும்பியதும் இரு திருடர்களும் அவனைக் கொலை செய்தனர். ஏனெனில் தங்கம் முழுவதையும் தாங்களே கவர எண்ணினர். உணவு வாங்கி வந்த திருடனோ உணவில் நஞ்சு கலந்திருந்தான். அவனும் மற்ற இருவரைப் போலவே தங்கம் முழுவதையும் தானே அபகரிக்க விரும்பினான். நஞ்சூட்டப்பட்ட உணவு உண்ட திருடர்களும் மாண்டனர். தங்கம் பிழைத்தது. சாமியாரின் வாக்குப்பலித்தது.