Switch Language:   English | தமிழ்

    குழந்தை வேண்டுமானால், Laptop க்கு மடியைக் கொடுக்காதீர்!

    மடிக்கணினிக்கும் மடியில் குழந்தை தவழ்வதற்கும் தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? இதோ இந்தச் சம்பவத்தைப் பாருங்கள்.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்காட் ரீட் - லாரா தம்பதிக்குக் கருத்தரிப்பில் பிரச்சனைகள் உண்டாகி இருக்கிறது.

    இது தொடர்பாக டாக்டரிடம் அவர்கள் ஆலோசனை செய்தபோது, 'உங்கள் கணவர் அதிகம் மடிக்கணினி பயன்படுத்துவாரா?’ என்று லாராவை டாக்டர்கள் கேட்டுள்ளார்கள். அவர் 'ஆமாம். அதற்கென்ன?’ என்று அலட்சியமாகக் கேட்க, 'இனி, மடிக்கணியை மடி மேல் வைத்து அவர் பயன்படுத்தக் கூடாது!’ என்று மருத்துவர்கள் சொல்ல அதிர்ந்துபோனார் அவர். ஆனால், அடுத்த மூன்றே மாதங்களில் லாரா கருத்தரித்துள்ளார்.

    மடிக்கணினிக்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்பு இருக்கும் என்பதை தன் மனைவி கருவுறும்வரை ஸ்காட் முழுமையாக நம்பவில்லை. ''லேப் டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்துப் பயன்படுத்துவதால் இப்படி ஒரு பாதிப்பு வரும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவே இல்லை. டாக்டர் சொன்ன பிறகுதான் மடிக்கணினி விதைப்பையை வெப்பமாக்கி விந்தணுக்களைப் பலவீனப்படுத்தும் என்று அறிந்தேன்' என்கிறார்.

    இது ஒரு பக்கமிருக்க, 'ஃபெர்டிலிட்டி அன்ட் ஸ்டெர்லிட்டி’ என்ற பன்னாட்டு நல்வாழ்வு நிறுவனம் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில் 29 இளைஞர்களைத் தேர்வுசெய்து அவர்களை நீண்ட நேரம் மடிமேல் மடிக்கணினியைப் பயன்படுத்தச் செய்தனர். அவர்களின் விதைப்பையில் நுண்ணிய சென்சார்களைப் பொருத்தி வெப்ப மாறுதலைக் கண்டறிந்தார்கள். முடிவில் மடிக்கணினியை நீண்ட நேரம் மடிமேல் வைத்துப் பயன்படுத்துவது உஷ்ணத்தை உண்டாக்கி விந்தணுக்களைச் சிதைக்கிறது என்பது தெரியவந்தது.

    இதில் ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் மடிக்கணினியின் சூட்டைக் குறைக்கப் பயன்படுத்தும் 'கூலர் பேட்கள்(Cooler Pad)’ எவ்விதத்திலும் விந்தணுக்கள் பாதிப்படைவதைத் தடுக்கவில்லை என்பதுதான்.  'ஸ்க்ரோட்டல் ஹைப்பர்தெர்மியா(Scrotal Hyperthermia)  என்னும் இந்தப் பாதிப்புக்கு அவ்வளவு அஞ்சத் தேவை இல்லை!’ என்று மருத்துவர்கள் கூறுவது கொஞ்சம் ஆறுதலான செய்தியாக உள்ளது. மடிக்கணியை மடியில் வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து நிரந்தரமாகக் கருத்தரிக்கும் வாய்ப்பை அழிக்காது என்கின்றனர் மருத்துவர்கள். 

    'பொதுவாகவே  விதைப்பை குளிர்காலங்களில் சுருங்கியும் வெயில் காலங்களில் சற்றுத் தளர்வான நிலையிலும் இருந்து, வெப்பநிலையைச் சமன் செய்யும் ஆற்றல் பெற்றவை. வெப்பநிலை அதிகமானால் அந்த உஷ்ணத்தைத் தாங்காமல் விந்தணுக்களில்  டிஎன்ஏ ஃப்ராக்மென்டேஷன் (DNA Fragmentation) ஏற்படும் அளவு உயர்கிறது. நீண்ட நேரம் மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துவோர் மட்டுமின்றி, லாரி ஓட்டுநர்கள், அடுப்பின் அருகில் எந்நேரமும் இருக்கும் சமையல் காரர்கள், அனல் மிகுந்த இடங்களில் பணிபுரிபவர்கள் அனைவருக்குமே இந்தப் பிரச்னை வரலாம். 

    அதிக நேரம் மடிக்கணினியைப் பயன்படுத்தும் பெண்களுக்குத் தொடைப்பகுதியில் நிரந்தரமாகத் தோல் கருத்துப் போகலாம். தோல் தொடர்பான பிரச்னைகள் வரவும் வாய்ப்புகள் உண்டு. மேற்குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியில் கூலர் பேட்களோ, மடி மீது தலையணை வைத்து அதன் மேல் மடிக்கணினியை இயக்குவதோ பயன் தராது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மடிக்கணினியை மேசை மீது வைத்து இயக்குவதே சாலச் சிறந்த முறையாகும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மடிக்கணினியை மடி மேல் வைத்துதான் பயன்படுத்த வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டால், கால்களை நன்கு அகட்டி வைத்துக்கொண்டு மடிக்கணினியைப் பயன்படுத்தினால் பாதிப்பு குறையும்' என்கின்றனர் மருத்துவர்கள்.

    முடிந்தவரை மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்தாமல் மேஜையின் மீது வைத்துப் பயன்படுத்தி, சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். நிறையத் தண்ணீர் குடியுங்கள். போதுமான உடற்பயிற்சி செய்யுங்கள். சந்தேகம் இல்லை. ஆரோக்கியமான விந்தும் ஆரோக்கியமான சந்ததியும் சாத்தியமாகும்.