Switch Language:   English | தமிழ்

    விரைவில் உருகிவிடும் பப்பின் தீவு

    கடந்த 44,000 ஆண்டுகளில் இல்லாததவை விட ஆர்க்டிக் பகுதியின் வெப்பநிலை தற்போது அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து லைப்சயின்ஸ் இதழில் டக்ளஸ் மெய்ன் விரிவாக எழுதியுள்ளார்.

    ஆர்க்டிக் பகுதியில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக அங்குள்ள பல ஐஸ் மலைகள் உருகி வருவது கவலைக்குரியது எனவும் அத்தனை ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் கனடிய பகுதியில் உள்ள ஆர்க்டிக்கின் கோடைகால வெப்பநிலை கடந்த 44,000 ஆண்டுகளில் இருந்ததை விட அதிக அளவில் உயர்ந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    அதை விட முக்கியமாக கடந்த 1,20,000 ஆண்டுகளிலும் இது மிகவும் அதிகமான வெப்பநிலை என்றும் இந்த ஆய்வு பயமுறுத்துகிறது.

    இதுகுறித்து கொலராடோ பல்கலைக்கழக ஆய்வாளர் கிப்பர்ட் மில்லர் கூறுகையில், கனடிய ஆர்க்டிக் பகுதியில் வரலாறு காணாத வெப்ப நிலை நிலவிக் கொண்டிருக்கிறது. இது நிச்சயம் கவலைக்குரியது என்றார்.

    மில்லரும், அவரது குழுவினரும்தான் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் ஆவர். நமக்கு வெளியில் தெரியாமலேயே இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகவும் மில்லர் குழுகவினர் கூறுகிறார்கள்.

    பனிக் கட்டிகளுக்கிடையே அமிழ்ந்து கிடக்கும் காற்றுக் குமிழிகளை ஆய்வு செய்தும், கனடாவின் பப்பின் தீவில் உள்ள உருகிய ஐஸ் மலையின் துண்டை எடுத்தும் தங்களது சோதனையை மில்லர் குழுவினர் நடத்தியுள்ளனர்.

    கடந்த நூறு ஆண்டுகளாகவே ஆர்க்டிக்கில் உஷ்ணம் அதிகரித்து உருகி வருகிறது, அதிலும் கடந்த 20 ஆண்டுகளாக இது வேகமாகநடந்து வருகிறது.

    கிட்டத்தட்ட பப்பின் தீவு முழுவதுமே உருகிக் கொண்டிருக்கிறது, விரைவிலேயே இங்கு பனிக் கட்டிகள் கரைந்து போய் விடும் என்கிறார்கள்.