Switch Language:   English | தமிழ்

    பூமியின் வடதுருவ பகுதியின் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை: விஞ்ஞானிகள் தகவல்

    பூமியின் வட துருவமான, ஆர்க்டிக் பகுதியின் வான்வெளியில் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    பூமியின் வடதுருவத்தில் ஸ்காண்டிநேவியா, ரஷ்யாவின் வடபகுதி மற்றும் கிரீன்லாந்து ஆகியவை அடங்கிய பகுதி ஆர்க்டிக் என அழைக்கப்படுகிறது.

     

    சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களைத் தடுக்கும் வகையில் பூமியைச் சுற்றி ஓர் உறை போல் ஓசோன் மண்டலம் அமைந்துள்ளது.

    பூமியில் இருந்து 10 முதல் 15 கிலோமீற்றர் உயரத்தில் அமைந்துள்ள இம்மண்டலம் பல்வேறு வாயுக்களால் சேதம் அடையும் போது அடர்த்தி குறைந்து விடுகிறது. இதனால் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக பூமியைத் தாக்குகின்றன. இத்தாக்குதலால் புற்று நோய், கண்நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரிக்கின்றன.

    ஓசோன் மண்டலத்தைப் பற்றிய ஆய்விற்காக ஜப்பான் உள்ளிட்ட ஒன்பது நாடுகளின் விஞ்ஞானிகள் இணைந்த ஒரு குழு செயல்பட்டு வருகிறது. இக்குழு சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி ஆர்க்டிக் துருவத்தின் மேல் பகுதியில் ஓசோன் மண்டலத்தில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது.

    இந்த ஓட்டை ஆண்டு தோறும் குளிர்காலமான செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் தென் துருவமான அன்டார்டிக்கின் மேல் பகுதியில் விழும் ஓட்டை அளவுக்கு இருப்பதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. இத்தகவல் பிரிட்டனில் இருந்து வெளிவரும் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.

    ஆர்க்டிக் ஓசோன் ஓட்டை பற்றிய தகவல் கடந்த ஏப்ரலில் வெளிவந்தாலும் தற்போது முழு ஆய்வின் அடிப்படையில் நேச்சர் இதழில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த ஓட்டைக்கு, அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவி வரும் குளிர் சூழலே காரணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குளிர் சூழலில் வெளியிடப்படும் குளோரின் மூலக்கூறுகள் ஓசோனைச் சிதைக்கும் தன்மை கொண்டவை.

    இதுகுறித்து நாசாவின் மிக்கேல் சான்டீ கூறியதாவது, பூமியிலிருந்து 10 முதல் 50 கி.மீ வரை பரவியுள்ள ஸ்ட்ரோட்டோஸ்பியர் என்ற வளிமண்டல அடுக்கில் குளிர்காலத்தில் பொதுவாக சில இடங்களில் வெப்பமாகவும் சில இடங்களில் குளிராகவும் இருக்கும்.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த அடுக்கின் அனைத்துப் பகுதிகளிலும் குளிராகவே இருக்கிறது. இதனால் குளோரின் வெளியீடு அதிகரிக்கும். அப்படி அதிகரித்தால் ஓசோனில் உள்ள ஓட்டை அதிகமாகவே செய்யும் என்றார். இதன் விளைவுகள் குறித்து அக்குழு தொடர்ந்து ஆய்ந்து வருகிறது