Switch Language:   English | தமிழ்

    இணையத்தின் பயன்கள்

    கணனியைப் பயன்படுத்துவோர் எவரும் 'இன்டர்நெற்' எனப்படும் இணையத்தைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. கணனியைப் பயன்படுத்தும் வாய்ப்பற்றோர் பலரும் கூட இன்று இணையத்தைப் பற்றித் தெரிந்தே இருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.

    காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும்வரை மனிதரின் செயற்பாடுகள் அனைத்திலும் இணையத்தின் தலையீடு இன்று இருக்கிறது. காலையில் புதினப்பத்திரிகை படிப்பது தொடங்கி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது உட்பட இணையத்தின் மூலமே செய்துகொள்ள முடியும் என்பது இன்று உறுதியாகி விட்டது. இன்று இணையம் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. மொழி, இனம், நாடு அனைத்திற்கும் அப்பால் மனித சமுதாயம் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் இணையத்திற்கு உள்ளது. இந்த உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்வதோடு அதன் பயன்களை நுகரவும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    இன்று நாம் வீட்டில் தொலைபேசி இருந்து அதில் வெளியூர், வெளிநாட்டு அழைப்பு வசதி இருக்குமெனில்,உலகின் எந்த மூலையிலுமுள்ள ஒருவருடன் (அவரிடம் தொலைபேசி இருக்க வேண்டும்) உடனடியாகத் தொடர்புகொள்ள முடியும். தொலைபேசிக் கட்டமைப்பு போலவேதான் இணையக் கட்டமைப்பும் அமைந்துள்ளது. பல்வேறு தொலைபேசிகள் இணைக்கப்பட்டுள்ளதைத் தொலைபேசி நிலையம் என்கிறோம். அதுபோலப் பல்வேறு கணனிகளை ஒன்றினைப்பதைப் பிணையம்/வலையமைப்பு(Network) என்கிறோம்.

    இவ்வாறு ஒரு நாட்டிலுள்ள பல நூறு கணனியிணையங்கள் ஒரு முதுகெலும்புப் பிணையத்தில் (Backbone network) இணைக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஒரு பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கணனியிலிருந்து வேறொரு பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள கணனியுடன் தொடர்புகொள்ள முடிகிறது.

    ஒவ்வொரு நாட்டிலுமுள்ள முதுகெலும்புப் பிணையங்கள் அவ்வந் நாட்டின் நுழைவாயில் கணனி அமைப்பு (gate ways) வழியாகத் தமக்குள்ளே பிணைக்கப்படுகின்றன. இதன் பேறாக ஒரு நாட்டிலுள்ள கணனியிலிருந்து வேறொரு நாட்டிலுள்ள கணனியுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. நாடு முழுவதிலுமுள்ள இணையச் சேவைகள் (Internet Service Providers) தத்தம் மையக் கணனி அமைப்புக்களை முதுகெலும்புப் பிணையத்தில் இணைத்துள்ளனர். நமது வீட்டிலுள்ள கணனியிலிருந்து நாம் கணக்கு வைத்துள்ள இணையச் சேவையாளரின் மையக் கணனியுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உலகின் எந்த மூலையிலுமுள்ள கணனி அமைப்புடனும் தொடர்புகொள்ள முடிகிறது.

    ஆகவே, இணையம் என்பது பல்லாயிரக் கணக்கான கணனிப் பிணையங்களின் ஒருங்கிணைக்கப்பட்ட, பிணையங்களின் பிணையமாய் (Network of Networks) இருக்கிறது. பயனாளர்கள் தனிப்பட்ட கணனியிலிருந்து இம் மாபெரும் பிணையத்தில் இணைத்துப் பயன் பெறவும் முடிகிறது. ஏற்கனவே உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தொலைபேசிக் கட்டமைப்பு இணையத்தின் வளர்ச்சியில் நேரடிப் பங்கு வகித்துள்ளது.

    கணனியை நமது பாடசாலைகளில் உதவிடும் ஒரு கருவியாகவே பயன்படுத்தி வந்தோம். ஆனால், இணையத்தின் வருகை கணனியின் இலக்கணத்தையே மாற்றிவிட்டது. மனித வாழ்க்கைக்கு உதவிடும் கருவியாக இருந்த கணனி மனித வாழ்க்கையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றதாய் மாறிவிட்டது. நமது பண்பாட்டு நடைமுறைகள், வாழ்க்கைச் சிந்தனைகள்,வாழ்வின் அன்றாட நடைமுறைகள் இவை அனைத்தையும் அப்படியே புரட்டிப் போடும் ஆற்றல் கொண்டதாக இணையம் விளங்குகிறது.

    இணையத்தின் பயன்பாடுகள் பற்பல. அவற்றை பின்வரும் வகையில் அட்டவணைப்படுத்தலாம்.

    1. தகவல் களஞ்சியம்: இணையத்தில் மனித சமூதாயம் இதுவரை சேமித்து வைத்த அறிவுக் களஞ்சியம் முழுக்கக் கிடைக்கிறது. இணையத்தில் நமக்கு தேவையான தகவலை எளிதில் பெறமுடியும்.

    2. கடிதப் போக்குவரத்து: இணையத்தின் பெரும் பயன்களில் அடுத்ததாக அறியப்படுவது மின்னஞ்சல்(E-mail). இணைய சேவையாளர் ஒருவரிடம் இணைய இணைப்பு (Internet Account) பெறும் போதே மின்னஞ்சல் வசதியும் கிடைத்துவிடுகிறது. இலவசமாக மின்னஞ்சல் சேவையை வழங்கும் நிறுவனங்களும் உண்டு. மின்னஞ்சல் மூலமாக உலகின் எந்த மூலையில் வசிப்பவருக்கும் கடிதம் அனுப்ப முடியும். அவருக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதும். மின்னஞ்சல் முகவரி உலகுக்கு உங்களைத் தனித்து அடையாளம் காட்டுகிறது.

    3. கல்வி: கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் யாவும் இணையத்தில் உள்ளன. கல்வி கற்பது இணையம் மூலம் சாத்தியமாகும் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. பல்வேறு கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் இணையம் வழி வகுப்புக்களை நடத்தி வருகின்றன.

    4.பத்திரிகைகள்: நாளிதழ் தரும் செய்திகளைப் போன்று சுடச்சுடச் செய்திகளை இணையம் தருகிறது. இணையத்தில் வெளிப்படும் பத்திரிகைகளில் சிலமணி நேரத்துக்கு ஒரு தடவை செய்திகள் புதுப்பிக்கப்படுகின்றன. ஏற்கனவே அச்சில் வெளிவந்து கொண்டிருக்கும் பிரபலமான பத்திரிகைகள் அனைத்தும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவை தவிர இணையத்தில் மட்டுமே பிரசுரிக்கப்படும் மின்னிதழ்களும் ஏராளமாக உள்ளன.

    5.வணிகம்: வீட்டிலிருந்தபடியே கணனி முன் அமர்ந்து கொண்டு இணையத்தில் கடைப்பரப்பியுள்ள மெய்நிகர் அங்காடிகளில்(virtual shops) பொருள்களைப் பார்வையிட்டு, பற்று அட்டை(credit card) மூலம் இணையம் வழியாகவே பணம் செலுத்திப் பொருள் வாங்கும் மின்வணிகம்(e-commerce) இப்போது பரவலாகி வருகிறது. பயணச்சீட்டு முன்பதிவுகள், திரைப்படச்சீட்டு முன்பதிவு, தங்குமிட முன்பதிவு, வங்கி நடைமுறைகள் இன்னோரன்ன வணிக நடவடிக்கைகள் பலவும் இணையம் வழி நடைபெறத் தொடங்கியுள்ளன. புத்தகங்கள், இறுவட்டுகள், ஒலிப்பேழைகள், வாழ்த்து அட்டைகள், மென்பொருள் தொகுப்புகள் போன்றன கூட இணையம் வழி விற்கப்படுகின்றன.

    6.பொழுதுபோக்கு: இணையம் ஒரு பொழுதுபோக்கு தளமாகவும் விளங்கி வருகின்றது. பல்வேறு நிகழ்ச்சிகளை இணையத்தில் கண்டு, கேட்டு, இரசிக்க முடியும். தனிமையை விரட்டுகின்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இணையத்தில் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.

    7. வேலைவாய்ப்பு: இணையத்தை ஒரு சிறந்த வேலைவாய்ப்பு அலுவலகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். வேலைவாய்ப்புத் தொடர்பான விபரங்களை இணையம் மூலம் அறிந்து கொள்ள முடியும். 'வேலைக்கு ஆள் தேவை' விளம்பரங்களையும் பார்க்கமுடியும்.

    இவ்வாறு இணையத்தின் பயன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். தற்போது பெரும்பாலும் தொலைபேசியும் கணனியும் வைத்துள்ளவர்களே இணையத்தின் பயன்களை நுகர்ந்து வருகிறார்கள். வருங்காலத்தில் இந்தநிலை மாறும். கேபிள் தொலைக்காட்சி மூலமாகவும் இணையத்தை அணுகமுடியும். மின்னஞ்சல் அனுப்ப/ பெற, வங்கிக் கணக்குகளை பார்வையிட, சந்தை நிலவரங்கள் அறிய, வானிலை பற்றிய தகவல் பெற, இணைய அங்காடிகளில் பொருட்களை வாங்க 'இணைய தொலைக்காட்சி' வழிவகுக்கும். அதன் வழியே தொலைபேசியும் சாத்தியமாகும்.

    இன்று நாம் கணனியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன் மூலம் நாளுக்கு நாள் புதிய புதிய மாற்றங்களை கண்டுகொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் இணையம் வழியாகப் பற்பல மாற்றங்களை நாம் காணமுடியும். வளர்ந்துவரும் கணனி ஆய்வுகள் அதற்கு வழிவகுக்கும் எனத் துணிந்து கூறலாம். இணையத்தின் பயன்களை நம்மவர் நன்முறையில் நுகர முற்படுவதே இன்றைய தேவையாகும்.

    (திரு. மு. சிவலிங்கம் எழுதிய கட்டுரையொன்றின் சுருக்கம்)