Switch Language:   English | தமிழ்

    உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்

    'அன்புதான் இன்ப ஊற்று
    அன்புதான் உலகமகா சக்தி
    அன்புதான் உலக ஜோதி' என்று கூறுவர்.

    ஆம்! இந்த உலகில் பிறந்தவர்கள், வாழும் குறுகிய காலத்தினுள் எல்லோரிடத்திலும் அன்பு காட்டி, அன்பாக நடந்து அவர்களது அன்பையும் பெற்று பேரானந்தம் அடையலாம்.

    மனிதராயினும் சரி, மிருகங்கள்,பறவைகள் முதலிய உயிரினங்களாயினும் சரி நாம் எல்லா உயிர்களிடத்தும் அன்பாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அன்பிற்கு கட்டுப்படாத உயிர்கள் இல்லை. அன்பினால் நாம் இவ்வுலகில் எதனையும் சாதித்துவிட முடியும். கோபத்தினால், அதிகாரத்தினால் நாம் இன்னும் விரோதத்தையும், பகைமையும் மட்டுமே வளர்த்துக் கொள்வோம். ஆனால் அன்புடன் மற்றவர்களுடன் பழகும் போது அது இன்னும் அதிகரித்து நன்மையே செய்யும்.

    இதனாலேதான் "அன்பே சிவம்" என்பர். எந்த மதமானாலும் சரி, எந்த இனமானாலும் சரி மனிதர்கள் மனிதர்களேதான். அன்போடு யாவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். எல்லா மதமும் அன்புவழி நின்று எம்மை ஆற்றுப்படுத்துகின்றன.

    மிருகங்கள், பறவைகள் மற்றும் உயிரினங்கள் கூட நாம் அன்பு செய்யும் போது எம்மோடு கனிவாகப் பழகுகின்றன. ஐந்தறிவு ஜீவனே இவ்வாறு செய்யுமாயின் ஆறறிவு படைத்த மனிதர்கள் எவ்வளவு தூரம் அன்பிற்குக் கட்டுப்படுவார்கள்.

    வீண் சண்டைகளும், போர்களும், அழிவுகளும் மனிதநேயம் அற்றுப் போவதனாலேயே ஏற்படுகின்றன. மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பாக நடக்கும் போது இவ்வாறு வீண் அனர்த்தங்களுக்கு இடமேயில்லை.

    'ஒன்றே குலம் என்று பாடுவோம்
    ஒருவனே தேவன் என்று போற்றுவோம்
    அன்னை இதயமாக அன்பு வடிவமாக
    வந்து வழிகாட்ட வேண்டும் என்று வணங்குவோம்...' என்று ஒரு பாடல் கூறுகின்றது.

    அன்பு அள்ள அள்ள குறையாதது. மற்றவர்களுக்கு கொடுக்க கொடுக்க இன்னும் வளரும், பெருகும். நமக்கு நன்மையும், மகிழ்வையும் கொண்டு வரும். சாந்தியும்,சமாதானமும் தானாகவே தேடி வரும். இவ்வளவு நன்மைகளைச் செய்யும் அன்பினைக் காட்ட நாம் பின் நிற்கலாமா?

    'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்று திருவள்ளுவப் பெருமான் வினாவுகின்றார். ஆம்! அன்பினை யாராலும் அடைக்கவோ, தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. இத்தகைய அன்பினை மற்றவர்கள் மீது காட்டி நாமும் மகிழ்வாக இருந்து, மற்றவர்களையும் மகிழ்வாக வைத்து அன்பு நிறைந்த அமைதியான உலகு சமைப்போமாக.