Switch Language:   English | தமிழ்

    விஞ்ஞான வளர்ச்சியின் பயன்கள்

    கல்லையும் கல்லையும் உரசி தீயைக் கண்டு பிடித்ததிலிருந்தே மனிதனின் கண்டுபிடிப்புக்கள் ஆரம்பித்தன. அன்றிலிருந்து இன்றுவரை விஞ்ஞானம் வானளாவிய ரீதியில் வளர்ந்து விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையே விந்தைகள் செய்து கொண்டிருக்கின்றது.

    விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இன்று எமக்கு எவ்வளவு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. மனிதன் கருவிலே தோன்றிய காலத்திலிருந்து அவனது ஆயுள் முடிந்த பின்பும் விஞ்ஞானத்தின் பணி தொடர்வதைக் காண்கிறோம்.

    மருத்துவத்துறையில் நோய்களைக் கண்டுபிடிப்பதற்கும்,கண்டுபிடித்த பின் அவற்றை குணப்படுத்துவதற்கும், விஞ்ஞான உபகரணங்கள் பெரிதும் உதவுகின்றன. இதனால் இன்று இறப்புக்கள் குறைந்து மக்களது வாழ்க்கைத் தரம் உயர்கின்றது. வருமுன் காப்பது சிறந்ததல்லவா?

    இதற்கும் விஞ்ஞான தொழிநுட்பக் கண்டுபிடிப்புக்களும், மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளும் உதவுகின்றன.

    கல்வித்துறையில் இன்று விஞ்ஞானத்தின் பங்களிப்பு அளப்பரியது. தொலைக்காட்சி, வானொலி மட்டுமன்றி கணனியின் உபயோகம், கல்விக்கான ஆய்வுகூட உபகரணங்கள் மற்றும் நவீன கற்பித்தல் முறைகள் யாவும் விஞ்ஞான வளர்ச்சியின் விளைவுகளேயாகும்.

    போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்கு விஞ்ஞானம் ஆற்றிவரும் சேவை குறிப்பிடக்கூடியது. பரந்த உலகம் இன்று சுருங்கியது போக்குவரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியாலேயாகும். உலகின் எப்பாகத்திலிருந்தும் நினைத்தவுடன் நினைத்தவிடத்திற்கு சென்றுவிடக் கூடியதாயிருப்பது விரைவான போக்குவரத்து வசதிகளிலாலேயாகும். விண்வெளிப் பயணங்களும், கோள்கள் வானமண்டலங்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் விஞ்ஞானத்தின் விருத்தியினாலேயாகும்.

    விவசாயத்துறையில் நவீன முறைகள் புகுத்தப்பட்டு விளைச்சல் பெருகியிருக்கிறது. இயற்கை அழிவுகள் முன்கூட்டியே அறியப்பட்டு தவிர்க்கப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன. விளைபொருட்கள் விளைந்தபின் நவீன முறைகளில் அறுவடை செய்யப்படுவதுடன், நீண்டகாலத்திற்கு கெட்டுப் போகாமல் நவீன முறைகளில் பாதுகாக்கப்படுகின்றன. சமையலிலும் இன்று அடுப்புக்கள், மின்சாரத்தினால் இயங்கும்,இடிக்கும்,அரைக்கும் கருவிகள், குளிர்சாதனப் பெட்டிகள் எனப் பல்வேறு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    விளையாட்டுத் துறையிலும், பொழுதுபோக்குத் துறையிலும் இன்று நவீனமயம் புகுந்துள்ளது. மக்களது பொருளாதார நடவடிக்கைகள் யாவும் இன்று பெருமளவிற்கு விஞ்ஞானத்தின் உதவியால் விரைவாகவும், இலகுவாகவும் செய்து முடிக்கப்படுவதுடன் பொருட்களின் உற்பத்தியும், தரமும் உயர்ந்து காணப்படுகின்றன.

    இவ்வாறு பல்வேறு துறைகளிலும் நன்மை புரிந்துவரும் விஞ்ஞான வளர்ச்சியே சில சந்தர்ப்பங்களில் மனிதனின் அழிவுக்கும் காரணமாகி விடுகின்றது. போர் ஆயுதங்கள், அணுஆயுதங்கள், யுத்த விமானங்கள், யுத்த கப்பல்கள், துப்பாக்கிகள், ஏவுகணைகள் என மனிதகுலத்தின் பேரழிவுக்கு வழிவகுக்கும் இவையும் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புக்களே. இவை இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும்  அழிவினை விளைவித்து வருவதனை வேதனையுடன் கண்டுவருகின்றோம். தீயவற்றை விடுத்து நல்லனவற்றைப் பகுத்தறிந்து, அன்னப்பறவை நீரைத் தவிர்த்துப் பாலை அருந்துவது போல் நாமும் விஞ்ஞானம் தரும் நன்மைகளைப் பயன்படுத்தி நன்மை பெறவேண்டுமே ஒழிய தீயனவற்றிற்கு இடம் தரக்கூடாது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி மனிதகுலத்தின் நல்வாழ்விற்கு பயன்பட வேண்டும். விஞ்ஞானத்தின் துணையுடன் வாழ்வு வளம்பெற வேண்டும். எனவே விஞ்ஞானத்தின் விருத்தி நல்ல வழியில் பயன்படுத்தப்பட வேண்டும்.