Switch Language:   English | தமிழ்

    புதிய ஏழு உலக அதிசயங்கள்

    01. சிச்சென் இட்சா

    சிச்சென் இட்சா (Chichen Itza) என்பது மெக்சிகோ நாட்டின், யுகட்டான் (Yucatán) என்னுமிடத்திலுள்ள, கொலம்பசுக்கு முற்பட்ட காலத் தொல்பொருளியற் களம் ஆகும்.

    இது மாயன் நாகரீகக் காலத்தைச் சேர்ந்தது. தென்பகுதியைச் சேர்ந்த மத்திய தாழ்நிலப் பகுதிகளிலிருந்த மாயம் நாகரீகம் சார்ந்த பகுதிகள் வீழ்ச்சியுற்றபின், கி.பி. 600 ஆம் ஆண்டளவிலிருந்து பெரு வளர்ச்சி பெற்றுவந்த ஒரு முக்கியமான நகரமாக இது விளங்கியது. கி.பி 987 ல், தொல்ட்டெக் அரசனான குவெட்சால்கோட்டில் (Quetzalcoatl) என்பவன் மத்திய மெக்சிக்கோவிலிருந்து படையெடுத்து வந்து, உள்ளூர் மாயன் கூட்டாளிகளின் உதவியுடன், சிச்சென் இட்சாவைப் பிடித்துத் தனது தலைநகரம் ஆக்கிக் கொண்டான். அக் காலத்துக் கட்டிடக்கலைப் பாணி, மாயன் மற்றும் தொல்ட்டெக் பாணிகளின் கலப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். 1221 ஆம் ஆண்டில் இங்கே ஒரு புரட்சியும், உள்நாட்டுப் போரும் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, எரிந்த கட்டிடங்களின் எச்சங்கள் தொல்பொருளாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகள் சிச்சென் இட்சாவின் வீழ்ச்சிக்குக் காரணமானதுடன், யுகட்டான் பகுதியின் ஆட்சிபீடமும் மாயபான் (Mayapan) என்னுமிடத்துக்கு மாற்றப்பட்டது.


    சுற்றுலாப் பயணிகள் கோட்டை என அழைக்கப்படும் எல் காஸ்ட்டிலோ பிரமிட் மீது ஏறும் காட்சி

    சிச்சென் இட்சா அழிபாடுகள் நடுவண் அரசின் சொத்து. எனினும் களத்தைக் காக்கும் பொறுப்பை மெக்சிக்கோவின் மானிடவியல், வரலாற்றுத் தேசிய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. நினைவுச் சின்னங்கள் இருக்கும் நிலங்கள் 29 மார்ச் 2010 வரை தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்நிலங்களை இப்போது யுக்கட்டான் மாநிலம் விலைகொடுத்து வாங்கியுள்ளது.


    02. மீட்பரான கிறிஸ்து (சிலை)

    மீட்பர் கிறிஸ்து (போர்த்துக்கேய மொழியில்: Cristo Redentor) என்பது, பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையாகும். இது தேக்கோ கலையின் (Art Deco) மிகப்பெரும் எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின் சிலையாகும். இது 9.5 metres (31 ft) உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து, 39.6 metres (130 ft) உயரமும், 30 metres (98 ft) அகலமும் உடையது. இதன் மொத்த எடை 635 டன்கள் ஆகும். இது திசுகா காடுகளில் உள்ள 700-metre (2 ft) உயரமுள்ள கொர்கொவாடோ (Corcovado) மலையின் மீது நகரினை நோக்கியவாறு அமைந்துள்ளது. கிறித்தவ சின்னமான இது, ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டுக்கே சின்னமாக கருதப்படுகின்றது.[1] இது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மற்றும் உருமாறிய பாறையின் வகையினைச் சேர்ந்த சோப்புக்கல்லாலும் (soapstone) 1922-இல் இருந்து 1931-குள் கட்டட்ப்பட்டதாகும்.

    வரலாறு

    கொர்கொவாடோ மலையின் மீது ஒரு பெரிய சிலையினை வைக்கும் யோசனை வரலாற்றில் முதன் முதலில் 1850-களில் கத்தோலிக்க குருவான பேத்ரோ மரிய பாஸ் ஒரு பெரிய நினைவுச் சின்னம் கட்ட இளவரசி இசபெலிடமிருந்து நிதி கோரிய போது இடம்பெறுகின்றது. இக்கோரிக்கையினைப்பற்றி இளவரசி மிகுந்த கவனம் கொள்ளவில்லை. 1889-இல் பிலேசில் நாட்டில் அரசு சமயம் பிரிவினை ஏற்பட்ட போது இக்கருத்து நிராகரிக்கப்பட்டது.[4]

    இரண்டாம் முறையாக இம்மலையின் மிது ஒரு சின்னம் எழுப்ப வேண்டும் என்னும் கோரிக்கை 1921-இல் ரியோ நகர கத்தோலிக்க மக்களிடம் எழுந்தது. [5] பிரேசில் நாட்டின் கத்தோலிக்க மக்கள் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி ஒரு சிலையினை எழுப்ப நிதி திரட்டினர்.

    இம்மலையின் மீது கட்டப்படவிறுந்த கிறிஸ்துவின் சிலை முதலில், சிலுவையோ அல்லது கிறிஸ்து தனது கரங்களில் உலகினை ஏந்தியவாறு நிற்பதாகவோ உறுவாக்கக்ப்பட இருந்தது,[6] ஆனால் இறுதியில் அமைதியின் அடையாளமாக திறந்த கரங்களோடு இருப்பதுபோல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
    சிலையின் மற்றோரு கோணம்

    உள்ளூர் பொறியாளர் ஹிய்டோர் தா சில்வா கோஸ்டாவினால் சிலை வடிவமைக்கப்பட்டு பிரஞ்சு சிற்பி பாவுல் லான்டோஸ்கியினால் செதுக்கப்பட்டது.[7] பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப குழாமினால் லான்டோஸ்கியின் ஆய்வு முடிவை பரிசோதிக்கப்பட்டு, சிலுவை வடிவில் உள்ள இந்த சிலைக்கு எஃகினைவிடவும் வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று மிகவும் பொருத்தமானதாகக் கொள்ளப்பட்டது.[4] நீடித்த குணங்கள் மற்றும் பயன்படுத்த எளிதாக இருப்பதர்க்காகவும் வெளிப்புறத்தில் சோப்புக்கல் பூச்சு இணைக்கப்பட்டது. [2] கட்டுமானம் 1922 இலிருந்து 1931 வரை, ஒன்பது ஆண்டுகள் நடந்தது. இதன் மொத்தம் செலவு ஐஅ$250000 ஆகும். இந்த நினைவுச்சின்னம் அக்டோபர் 12, 1931 அன்று திறக்கப்பட்டது..[2][3][5][4]

    அக்டோபர் 2006-இல், இச்சிலையின் 75ஆவது ஆண்டு விழாவின் போது, ரியோ நகரின் பேராயர், கர்தினால் ஆஸ்கார் ஷீல்டு, இச்சிலையின் அடியில் ஒரு சிற்றாலயத்தை அருட்பொழிவு செய்தார். அதனால் இப்போது அங்கே திருமணமும், திருமுழுக்கு கொடுப்பதும் வழக்கமாகியுள்ளது.[3]
    சிலையின் முகம்.

    15 ஏப்ரல் 2010 அன்று சிலையின் தலையிலும் வலது கையின் மீதும் கிராஃபிட்டியால் கிறுக்கப்பட்டிருந்தது. ரியோ நகரின் மாநகராட்சித் தலைவர் இதனை நாட்டுக்கே எதிரான குற்றம் எனக் கண்டித்தார். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க துப்பு தருவோர்க்கு R$ 10,000 பரிசுத்தோகையினையும் அறிவித்தார். [8][9]ரியோ நகரின் இராணுவப்படை காவல்துறையினர் பவுலோ சொசுசா என்பவரை சந்தேகத்தின் பேரின் கைது செய்துள்ளனர்.


    03. கொலோசியம், ரோம்

    கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் (amphitheatre) எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் வட்டவடிவ அரங்கம் என்ற பொருள் கொண்டது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.

    கட்டுமானம்
    கொலோசியத்தின் உட்புறத் தோற்றம் ஒன்று. நிலம் தற்கால மீள்கட்டுமானம் ஆகும். இதன் கீழ் அக்காலத்தில் விலங்குகளையும், அடிமைகளையும் அடைத்து வைக்கும் சிறிய அறைகள் இருந்தன.

    கி.பி 72 ஆம் ஆண்டில், வெஸ்பாசியன் (Vespasian) என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. இது நீரோ மன்னனின் மாளிகைக்கு அருகில், நீரோவின் ஏரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. கொலோசியத்தின் திறப்புவிழாவுக்கான நூறு நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது 9,000 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக பண்டைய ரோமானிய வரலாற்றாளரான டியோ கசியஸ் (Dio Cassius) என்பவர் கூறியுள்ளார்.


    04. சீனப் பெருஞ் சுவர்

    சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) (長城 எளிதாக்கப்பட்டது: 长城 பின்யின்: (ச்)சாங் (ச்)செங், நேரடிக் கருத்து: "நீண்ட நகர் (கோட்டை)") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது.

    இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.

    வரலாறு

    கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள் பற்றி அறிந்திருந்தனர். இச் சுவர், குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில், சண்டையிட்டு வந்த சி, யான், சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. இச் சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட மண், சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு, வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன. கிமு 221 ஆம் ஆண்டில் சின் ஷி ஹுவாங் எதிரி நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி சீனாவை ஒன்றிணைத்து சிங் வம்ச அரசை நிறுவினார். மையப்படுத்திய ஆட்சியை நடத்துவதற்காகவும், நிலப்பிரபுக்கள் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கவும், தனது பேரரசுக்கு உட்பட்ட நாடுகளின் இடையில் அமைந்திருந்த எல்லைச் சுவர்களை இடித்துவிட அவர் ஆணையிட்டார். இடையிடையே காணப்பட்ட இடைவெளிகளையும் நிரப்பி வடக்கு எல்லைச் சுவரை முழுமைப்படுத்தினார். பின் வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும், விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர், மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது.


    05. மச்சு பிக்ச்சு

    மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்[1]. இது பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு வந்த மச்சு பிக்ச்சு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது.



    இது 1450ம் ஆண்டில் கட்டப்பட்டு நூறாண்டுகளின் பின்னர் இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது. பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. இந்நகரம் 1867ம் ஆண்டிலேயே ஜெர்மனியின் ஆகுஸ்டோ பேர்ன்ஸ் என்னும் பெரும் வர்த்தகரால் கண்டுபிடிக்கப்பட்டு கைவிடப்பட்டதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது

    1981 ஆம் ஆண்டில் இக்களம் பெருவின் ஆரசால் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ஆம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது.

    மச்சு பிக்ச்சு இன்கா காலத்தைய கட்டிடக் கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள "இன்டிகுவாட்டானா" என்ற சூரியனுக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய பகுதியாகும். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதனைக் கண்டுபிடித்த ஹிராம் பிங்கம் தன்னுடன் எடுத்துச் சென்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இந்நகருக்கு மீளக் கொண்டு வர பெரு அரசுக்கும் யேல் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் 2007ம் ஆண்டில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் பெருமளவு உல்லாசப் பயணிகள் இங்கு முற்றுகை இடுவதும் இக்களத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 2003ம் ஆண்டில் மட்டும் 400,000 உல்லாசப் பயணிகள் இங்கு வருகை தந்திருந்தனர்.

    வரலாறு

    மச்சி பிக்ச்சு நகரம் 1450 ஆம் ஆண்டளவில் இன்கா பேரரசின் ஆட்சி உச்சத்தில் இருந்தபோது அமைக்கப்பட்டது[3]. 100 ஆண்டுகளின் பின்னர் 1572 ஆம் ஆண்டில் எசுப்பானியர்களின் ஆக்கிரமப்பைத் தொடர்ந்து இந்நகரம் கைவிடப்பட்டது[3][4]. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரேயே இந்நகரத்தின் மக்கள் இங்கு பரவிய பெரியம்மை நோய் காரணமாக அழிக்கப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. பிக்ச்சோ என்ற பெயருள்ள ஒரு நகரைப் பற்றி எசுப்பானியர்கள் அறிந்திருந்தார்கள் என்றாலும், அவர்கள் அந்நகருக்கு சென்றார்கள் என்பது குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆக்கிரமிப்பாளர்கள் வேறு இடங்களில் உள்ள புராதன கற்பாறைகளை அழித்திருந்தனர் என்றாலும், மச்சு பிக்ச்சுவில் உள்ளவற்றை அவர்கள் தொடவில்லை.


    06. பெட்ரா

    மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டம் தான் ஜோர்டான் நாட்டில் அமைந்துள்ள பெட்ரா குகைக் கோவில்கள். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டு வரை பலராலும் அறியப்படாமல் இருந்த இந்த மலை நகரத்தை, 1812-ம் ஆண்டு லுட்விக் பர்க்ஹார்ட் (லிuபீஷ்வீரீ ஙிuக்ஷீநீளீலீணீக்ஷீபீt) என்ற சுவிட்சர்லாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்தான் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். பின்னர் 1985-ம் ஆண்டு இது யுனெஸ்கோ அமைப்பால் உலக கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 2007-ல் சுவிட்சர்லாந்து நாட்டின் தனியார் அமைப்பு வெளியிட்ட புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

    உலக அதிசயமாக கருதப்படும் அளவுக்கு அங்கு என்ன இருக்கிறது? கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்ட இந்த மலைக் கோவில்கள் இன்னும் காலத்தை வென்று நிற்கின்றன என்ற ஒரு காரணமே போதும். ஆனால் அதையும் தாண்டி பல அதிசயங்கள் அங்கே விரிந்து கிடக்கின்றன. பண்டைய காலத்தில் நெபாடியர்களின் தலைநகரமாக செல்வ வளம் கொழித்த நகரம் தான் பெட்ரா. பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் பாறை என்று அர்த்தம். நாலாபுறமும் மலைகள் சூழ நடுவில் இருக்கும் பள்ளத்தாக்கில் அமைந்திருந்ததால் இந்த நகரம் மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்பட்டது.

    நெபாடியர்கள் தண்ணீர் மேலாண்மையில் கைதேர்ந்தவர்கள். அந்த வறண்ட மலைப் பிரதேசத்தில் பெய்யும் மழை வீணாகி விடாத வகையில் நகருக்குள் நேர்த்தியான கால்வாய்கள், அணைகள் போன்றவற்றை அமைத்து தண்ணீரை பல இடங்களில் தேக்கியுள்ளனர். காலத்தை வென்று வானைத் தொடும் வகையில் உயர்ந்து நிற்கும் குகைக் கோவில்கள் தான் இந்த நகரின் சிறப்பம்சம். இவற்றில் பல காலவெள்ளத்தில் சிதைந்து விட்டாலும், பானை சோற்றுக்கு பதம் சொல்வது போல இன்னும் சில பிரம்மாண்டங்கள் அங்கே நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, கருவூலம் என அழைக்கப்படும் அல்-கஸ்னே. பண்டைய மன்னர் ஒருவர் தனது பொக்கிஷங்களை போருக்கு செல்லும் வழியில் இந்த மலைக் குகையின் கூரைகளில் ஒளித்து வைத்தார் என்று ஒரு செவி வழிக் கதையும் உள்ளது. ஆனால் இந்த கல் கட்டிடத்தின் சிற்ப வேலைப்பாடுகளையும், கைவினை நுணுக்கங்களையும் பார்க்கும் போது இது உண்மையிலேயே கலைகளின் கஜானா என்றுதான் சொல்ல வேண்டும். குறுகிய மலைப் பாதை வழியாக இந்த இடத்தை அடைவதே மிகவும் சவால் மிக்க பயணமாக இருப்பதால் இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    பெட்ராவில் உள்ள ஒவ்வொரு கல் மாளிகையும் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்ப்பவை. பல்வேறு கலாசாரங்களின் கலவையாக இந்த கல் மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. நகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கோவிலின் முகப்பு பகுதி மலைக்க வைக்கும் நான்கு தூண்களுடன் பிரம்மாண்டமாக நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்று பார்த்தால் விழிகள் வியப்பால் விரிந்து விடுகின்றன. இந்த கோவிலைச் சுற்றி நடைபெறும் தொல்பொருள் ஆய்வுகளில் கண்டெடுக்கப்படும் பொக்கிஷங்கள் நாம் இன்னும் பல அதிசயங்களுக்கு தயாராக வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கின்றன.


    07. தாஜ் மகால்

    தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. மேலும் இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    தோற்றம்

    1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஸ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஸ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷா ஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது:

        "குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால், மன்னிக்கப்பட்டவனைப் போல் அவன் தனது பாவங்களிலிருந்து விடுதலை பெறுவான். ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு உண்டாகும். சூரியனும், சந்திரனும் கண்ணீர் வடிப்பர். படைத்தவனைப் பெருமைப் படுத்தவே இக்கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது".

    தாஜ்மகால், பாரசீகக் கட்டிடக்கலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான சமர்க்கண்ட்டிலுள்ள தைமூரின் சமாதி, ஹுமாயூன் சமாதி, ஷா ஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிற மணற்கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான் வெண்ணிறச் சலவைக்கற்களைப் பயன்படுத்தியுள்ளான். இவன் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் திருந்திய நிலையை அடைந்தன.

    கட்டிடக்கலை

    தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றி வடிவமானது.

    இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு மினார்கள் அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.