Switch Language:   English | தமிழ்

    தற்போதைய உலக செல்வந்தர்கள் பட்டியலில் கார்லோஸ் ஸ்லிம் முதலிடம்!

    உலகப் பெரும் செல்வந்தர்களை அவரவர் சொத்து மதிப்பின்படி பட்டியலிடும் ´போர்ப்ஸ்´ பத்திரிகை இந்த ஆண்டின் செல்வந்தர்களுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது.

    இந்தப் பட்டியலில் 1,426 கோடீஸ்வரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 5.4 ட்ரில்லியன் டொலர்கள். கடந்த ஆண்டு இது 4.6 ட்ரில்லியன் டொலர்களாக இருந்தது.

    இதன்படி உலகின் முதல் செல்வந்தராக மெக்சிகோவின் தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் ஹூலு பட்டியலிடப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 73 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.

    இலத்தீன் அமெரிக்க தொலைத் தொடர்புத் துறையையே தன் வசம் வைத்திருப்பவர், சில்லறை வர்த்தகத்தில் முதல் நிலை நிறுவனத்துக்கு சொந்தக்காரர் மற்றும் பல தொழில்களுக்கு சொந்தக்காரர். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார்.

    இரண்டாமிடத்தில் இருப்பவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரான பில் கேட்ஸூக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது சொத்து மதிப்பு 67 பில்லியன் டொலர்கள். பில் அண்ட் மலின்டா கேட்ஸ் பவுண்டேஷனுக்கு பல பில்லியன் டொலர்களை இவர் எழுதி வைத்த பிறகும் தொடர்ந்து முன்னணியில் உள்ளார்.

    உலகின் மூன்றாவது பெரும் செல்வந்தராக இடம்பிடித்திருப்பவர் அமான்சியோ ஒர்டேகா. உலகம் முழுக்க உள்ள ஜரா ஸ்டோர்ஸ்களின் சொந்தக்காரர். இவரது நிறுவனங்களின் முதலீட்டு மதிப்பு 84 பில்லியன் டொலர்கள். இவரது சொத்து மதிப்பு 57 பில்லியன் டொலர்கள்.

    அமெரிக்காவின் நெப்ராஸ்காவைச் சேர்ந்த முதலீட்டாளர் இவர். பெர்க்ஷையர் ஹதாவே நிறுவனத் தலைவர். இந்தியாவிலும் கூட முதலீடுகளை ஆரம்பித்துள்ளார். மொத்த சொத்து மதிப்பு 53.3 பில்லியன் டாலர்கள்.

    உலகின் 5வது பெரும் பணக்காரர் என்ற இடம் ஆரக்கிள் நிறுவனத்தின் லாரி எல்லிசனுக்குக் கிடைத்துள்ளது. இவரது சொத்து மதிப்பு 43 பில்லியன் டொலர்கள்.

    இந்தப் பட்டியலின்படி, 21.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடைய சொத்துகளை வைத்திருக்கும் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இந்திய செல்வந்தர்களில் முதல் இடத்தை தொடர்ந்து 6வது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

    இந்தியாவில் முதலிடம் என்றாலும் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷுக்கு 22வது இடம் கிடைத்துள்ளது.