உங்கள் தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கங்கள்!
- admin
- Category: ஆலோசனை
- Hits: 89
நமது தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கங்களைப் பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
எதற்கும் இணையதளம்:
⏩ இன்றைய நிலையில், விரல்நுனியில் இணைய வசதி இருப்பதால் நமக்கு இருக்கும் சிறு சந்தேகத்திற்கு கூட, செய்யும் வேலையை அப்படியே விட்டுவிட்டு அதை பற்றி தெரிந்துக் கொள்ள தேடலில் ஈடுபடுகிறோம். ஆனால் இந்த பழக்கம் நேரத்தை விரயமாக்கி நமது வேலையை பாதிக்கிறது. இதை தவிர்க்க, நமது சந்தேகங்களை குறித்துக் கொண்டு ஓய்வு நேரங்களில் அதை பற்றி அறிந்துக் கொள்ளலாம்.
ஓயாமல் கவனித்தல்:
⏩ அடிக்கடி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் ஏதும் வந்துள்ளதா என்று ஓயாமல் கவனிக்கும் பழக்கம் வேலையை மட்டுமல்லாமல் நமது மனநிலையையும் பாதிக்கின்றது.
தள்ளிப்போடுதல்:
⏩ அப்புறம் பார்க்கலாம், பிறகு செய்து கொள்ளலாம், நாளை பார்த்துக் கொள்ளலாம் என வேலைகளை தள்ளிப்போடுவதால் பல காரியங்களைச் செய்ய மறந்து விடுகிறோம்.
சமாதானம் செய்து கொள்ளுதல்:
⏩ ஒரு வேலையை தொடர்ந்து செய்ய வேண்டும் என முடிவு செய்திருப்போம். ஆனால் அதை செய்ய மறந்துவிட்டு, அதற்கு நாமே ஒரு காரணம் சொல்லி நம்மை சமாதானம் செய்து கொள்வோம். அதுவே பின்னாளில் நமக்கு பெரிய தடையாக வந்து நிற்கும்.
ஒரே இடத்தில் அமருதல்:
⏩ அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது, கணினித் திரையில் இருந்து கண்களை விலக்காமல் இருப்பது போன்ற பழக்கங்கள் நமக்கு சோர்வை உண்டாக்குகிறது.
திட்டமிடல்:
⏩ சிலர் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க மாட்டேன் என்று எதற்கு எடுத்தாலும் திட்டமிட்டு செயல்படுவார்கள். ஆனால் அதில் சிறு தடை ஏற்பட்டாலும் சோர்ந்துவிடுவார்கள். அதே போன்று சிலர் எந்த திட்டமும் இல்லாமல், வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியாக இருப்பார்கள். இந்த அதீத திட்டமிடலும், திட்டமின்மையும் வாழ்க்கைக்கு என்றும் நன்மை அளிக்காது.
முக்கியத்துவம் அளித்தல்:
⏩ நிறைய குறிக்கோள்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் எதை முதலில் செய்வது எதை பிறகு செய்வது என்பது போன்று குறிக்கோள்களின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
நேர்த்தியை எதிர்பார்த்தல் :
⏩ எல்லா காரியத்திலும் நேர்த்தியை எதிர்பார்க்கும் பழக்கம், காரியங்களை தள்ளிப்போட செய்கிறது. நேர்த்தி என்பது எல்லா விஷயத்திலும் கிடைப்பதில்லை. எனவே, வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
மேலே உள்ள பழக்கங்களை தவிர்த்தால் உங்களது முன்னேற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!