Switch Language:   English | தமிழ்

    சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள்

    நகர்ந்து கொண்டிருக்கும் நாட்கள் ஒவ்வொன்றும் தன் கடமையை கண்ணியமாக செய்கின்றது. விடியல் ஒரு நாளும் பின் வாங்கியது இல்லை, இரவு ஒரு போதும் நீடித்ததும் இல்லை. ஒவ்வொரு செயற்பாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றது.

    அது இயற்க்கைக்கு மட்டும் தானா....?? ஏன் நம்மிடம் இல்லை..?? இந்த உலகத்தில் நிமிர்ந்து வாழ வேண்டும், முன்னாள் நாம் போகும் போது பின்னால் யாரும் தூற்றக் கூடாது, யாரிடமும் கை நீட்டும் நிலை வர கூடாது, எண்ணங்கள் நிறைவேற வேண்டும், சாகசங்கள் செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்று எல்லாம் பல கற்பனை கோட்டைகளை மாத்திரமே கட்டி கனவுகளுக்குள்ளே தானே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    தோல்வி ஒன்று வந்து விட்டால் போதுமே இருட்டு அறையை இதயம் நாடும் கண்ணீரை இமைகளும் விரும்பும், என்ன அலைகள் ஓயாமல் நெஞ்சில் அடிக்கும், இறுதியில் நான் யார் ஏன் நான் வாழ வேண்டும் என்ற கேள்வியிலே தான் உங்கள் கேள்விகளும் அதனோடு சேர்ந்து உங்கள் வாழ்க்கையும் முடிய போகின்றது.
    நீ என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்கிராயே தவிர எப்படி செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும், அதன் விளைவுகள் என்ன உன்னால் அதனை செய்ய முடியுமா என்ற நேரான சிந்தனைகளை தனக்குள்ளே வினவியது உண்டா..!!

    நேரம் சுற்றிக் கொண்டே தான் இருக்கும், அதற்காக கடிகாரத்தை பிடித்துக் கொண்டால் காலச் சக்கரமும் உன் பிடிக்குள் அடங்கி விடுமா..!!

    சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள், மாணவர்களாக  இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, இங்கு இறந்த பின்பும் நிலைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் ஆசைகளையும், தேவை அற்ற சிந்தனைகளையும் அடக்கி தன்னை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
    நீ வெற்றி பெற நேரத்தை நண்பனாக்கிக் கொள். தன்னம்பிக்கையை மூலதனமாக்கு. வெற்றிகள் வரும் ஏற்றுக் கொள். தோல்விகள் வந்தால் துணிந்து எதிர்த்து போராடு.
    நிலையான சிந்தனையும், அன்பான இதயமும் எல்லோரிலும் வர வேண்டும். அனைவரும் இன மத பேதங்கள் மறந்து இன்பமாக வாழ வேண்டும் என்று எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திப்போமாக.