Switch Language:   English | தமிழ்

    குடும்ப வாழ்க்கை என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

    குடும்ப வாழ்க்கை பற்றிப்பேச அப்படி என்ன இருக்கிறது என்று மூக்கில் விரலை வைக்கிறீரகளா? இதைப் பற்றிப பேசலாம். நிறையப்  பேசலாம். மணித்தியாலக் கணக்கில் அல்லது பக்கம் பக்கமாகப் பேசலாம்.

    ஒரு ஆணும் பெண்ணும், அதுவும் முன் பின் தெரியாத, எங்கெங்கேயோ பிறந்த வளர்ந்த இருவரும் திருமணபந்தத்தில் இணைவதுடன் குடும்ப வாழ்க்கை எனும் நாடகம் ஆரம்பமாகின்றது. நான் இங்கே தொட்டுச் செல்வது சட்டப்படியான திருமண பந்தத்தைப் பற்றியது.

    ஓரிரு இளம்பராயத்திலிருந்தே காதல் வயப்பட்டு, ஒருவரையொருவர் புரிந்து கொண்டவர்கள் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையை தொடங்கியது போக, அநேகமானவர்கள் திருமண பந்தத்தில் இணைந்த பின்னர் தான் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள். இந்தப் புரிந்துணர்வு குறுகிய நாட்களுக்குள்ளும் முற்றுப்பெறலாம், கடைசிவரையும் முற்றுப் பெறாமலும போய்; விடலாம்.

    அடிப்படையில், குடும்ப வாழ்க்கையானது பரஸ்பர புரிந்துணர்வுடனும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து நடக்கின்ற போது தான் அந்த குடும்ப வாழ்க்கை இன்பகரமானதாக, மகிழ்ச்சிகரமானதாக எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லையென்றால், அது முட்கள் நிறைந்த, கரடு முரடானதாக, அதுவும் நரகத்தை விடவும் மோசமானதாகி விடும். இவ்வாறான குடும்ப வாழ்க்கையில் சிக்குண்டு, சின்னாபின்னமாகிப் போனவர்கள் பலரை நம் வாழ்க்கையில் பார்த்திருப்போம்.

    இன்றைய இயந்திரமாகிப் போன மனித வாழ்க்கையிலே, குடும்ப வாழ்க்கை பற்றிய அடிப்படை அறிவுகள் புகட்டப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் மிக மிகக்குறைவு. மாணவர்கள் தமது பள்ளிப்பருவத்திலும் சரி, இரண்டாம், மூன்றாம் கற்கை நெறிகளிலும் சரி, பரீட்சையில் சித்தியடைவதனை நோக்காகக் கொண்டதொரு பொறிமுறைக்குள் தான் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பெற்றோர்கள் கூட, தமது பிள்ளைகள் சிறந்த பெறுபேறுகள் பெற்றிட வேண்டுமென்பதிலே தான் குறியாய் இருக்கின்றார்கள்.

    இவ்வாறானதொரு பின்னணியிலே தான், இவர்கள் குடும்ப வாழ்க்கைக்குள் இணைக்கப்படுகிறார்கள். ஓரிருவர் தவிர்ந்த அநேகமானவர்கள் குடும்ப வாழ்க்கை என்றால் என்ன, அதன் நெறிமுறைகள் என்ன, அதனை வெற்றிகரமாகக் கொண்டு செல்வது எப்படி, பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அதனை அணுகுவது எப்படி என்பன போன்ற விடயங்களில் போதிய தெளிவில்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். குடும்ப வாழ்க்கை என்றால் வெறுமனே பாலியல் அல்லது உடலுறவு கொள்வது மட்டுமே என்பது பலரது தப்புக்கணக்கு. இதனால் தான் இப்போது அநேகமான குடும்பங்களில் சண்டை, சச்சரவுகளும், பிணக்குகளும் ஏற்பட்டு பிரிந்து விடுகின்ற நிலைக்குக் கூடத் தள்ளப்படுகின்றார்கள்.

    இவ்வாறான துர்ப்பாக்கியகரமான நிகழ்வுகள் இடம்பெறுவதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி, சமூகத்தின் பொறுப்பாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் மார்க்க அறிஞர்களும் கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாததாகி விட்டது. இது சம்மந்தமான விளக்கங்கள் இளம் சந்ததியினருக்கு விழிப்பூட்டல் நிகழ்ச்சிகள் மூலமாக தெரியப்படுத்தப்பட வேண்டும்.

    கணவனும் மனைவியும் தத்தமது உறவினர்கள் சார்ந்த சுகதுக்கங்களை தமக்கிடையே பரிமாறிக் கொள்கின்ற போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தனது துணையின் அது கணவனாக இருக்கலாம் அல்லது மனைவியாக இருக்கலாம், உறவினர்களைப் பற்றி தரக்குறைவாகவோ குறைகளை முன்னிலைப்படுத்தியோ கருத்துக்களை தனது துணையிடமோ அல்லது வேறு யாரிடமோ முன்வைக்கக் கூடாது. நிச்சயமாகத் தவறு என்று தெரிந்தாலும், அதனை மறைக்கக்கூடிய மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

    அவ்வாறே, எந்த சந்தர்ப்பத்திலும் தனது துணையின் குடும்பத்தைப் பற்றி உயர்வாகவே தனது குடும்பத்தாரிடம் ஒப்பிக்கவேண்டும். தனது குடும்பத்தைப் பற்றி அவர்கள் நன்றாகவே கருதுகிறார்கள் என்று கருத்துப்படவே தனது குடும்பத்தாரிடம் கூற வேண்டும். அவ்வாறு தான் தனது துணையின் குடும்பத்தாருடனும் கதைக்க வேண்டும். அதாவது தமது இருபக்க உறவினர்களின் மனங்களில் மற்றவர் பற்றி நல்லபிப்பிராயம் வரக்கூடியவாறு தான் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும்.

    மேலும், கணவன், மனைவி இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தனது துணையின் உறவினர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும். அதாவது கணவன் மனைவியின் உறவினர்களுக்கும், மனைவி கணவனின் உறவினர்களுக்கும் தாமாகவே முன்வந்து உதவிகளைச் செய்திட வேண்டும். அதுபோலவே, தனது உறவினர்களுக்கு உதவிகள் செய்கின்ற போது, இது நானாக செய்யவில்லை, தனது கணவன் அல்லது மனைவி தான் செய்யச் சொன்னது என்று கூறுவதற்கு கடுகளவும் கஞ்சத்தனம் பார்க்கக்கூடாது. தனது துணையைப் பற்றி எவ்வளவு தூரம் அவர்கள் மனங்களில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த முடியுமோ அந்தளவு முயற்சிகள் செய்யவேண்டும்.

    நான் சந்தித்த அநேகமான குடும்பப் பிரச்சினைகளில் அடிப்படைக் காரணியாக அமைந்த ஒரு விடயம் தான், தத்தமது உறவினர்கள் மேல் வைத்திருக்கும் அதீதமான அன்பு கலந்த பாசம். திருமணம் முடித்த பின்னரும், இந்த பாசப்பிணைப்பை விட்டு பிள்ளைகளுக்கும் வெளியே  வரமுடியவில்லை, பெற்றோர்களுக்கும் அவ்வாறு பிள்ளைகள் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெற்றோர்கள் எவ்வாறு திருமணம் செய்து ஒரு குடும்பமானார்களோ அவ்வாறே தமது பிள்ளைகளும் திருமணத்தின் பின் சுதந்திரமான ஒரு குடும்பமாக மிளிர வேண்டும் என்பதை பாசப்பிணைப்பை முன்னிலைப்படுத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இவ்வாறான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சுதந்திரமாக முடிவெடுக்கக் கூட விடுவதில்லை. இத்தகைய பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகள் பிரிந்து விட்டாலும் பரவாயில்லை, தமது வைராக்கியமான சிந்தனைகளைத் தான் திணிக்க முயற்சிக்கின்றார்களே தவிர, தமது பிள்ளைகளின் மற்றும் பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சமும் யோசித்துப்பார்ப்பதும் இல்லை, மற்றவர்களின் கருத்துக்களைக் கூட ஏற்றுக்கொள்வதும் இல்லை.

    கணவன் - மனைவி இருவரும் தங்களுக்கிடையிலான எந்தவிதமான இரகசியங்களையும் ஊடல் ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் கூட, மூன்றாவது நபருக்கு அது உறவினராயினும் சரி, ஆத்ம நண்பன் அல்லது நண்பியாயினும் சரி எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தக் கூடாது. ஒருவருக்கு மட்டும் தெரிந்தால் தான் இரகசியம். அது இருவருக்குத் தெரிந்து விட்டால் பரகசியம். இங்கே கணவன் - மனைவி என்ற இருவராயினும், ஈருடலாயினும் ஓருயிர் என்ற கோட்பாட்டில், இவர்களின் இரகசியங்கள் காக்கப்பட வேண்டும். அது அடுத்தவருக்குத் தெரிந்தால் பரகசியமாகி விடும்.

    எல்லாவற்றையும் விடவும் முக்கியமானது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்கின்ற தன்மை. யார் முதலில் விட்டுக்கொடுப்பது என்ற தாழ்வுச்சிக்கலை ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்து விட்டு, போட்டி போட்டுக் கொண்டு விட்டுக் கொடுக்க வேண்டும். நீங்கள் யாருக்காக விட்டுக் கொடுக்கப் போகிறீர்கள்? தத்தமது துணைக்காகத் தானே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒருவர் ஒன்றை விட்டுக் கொடுத்தால், மற்றவர் இரண்டை விட்டுக் கொடுக்கக் கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    அத்தோடு குடும்பச்சுமை என்பது இருவருக்கும் உரித்தானது என்பதை இருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சுகமோ, துக்கமோ இருவருக்கும் சமபாதி; என்பதில் வேற்றுமைப்படக் கூடாது. எந்த விடயமானாலும் இருவரும் கலந்தாலோசித்து முரண்பாடுகளைக் களைந்து முன்னெடுத்துச் செல்லப் பழக வேண்டும்.

    குடும்ப வாழ்க்கை கடினமானதுமல்ல, போராட்டமுமல்ல. அது அவரவர்கள் வாழ்கின்ற விதத்தைப் பொறுத்தது. மேற்கூறிய விடயங்களை விளங்கிக் கொண்டால், மற்றவர்கள் பொறாமைப்படுமளவுக்கு வாழ்ந்து காட்டலாம்.

    முயற்சியுங்கள்! வெற்றி நிச்சயம்!! எதிர்காலம் உங்கள் கைகளில்!!!