ஒரே மாதத்தில் டக்குன்னு உடல் எடையை குறைக்கனுமா.. சிக்கனை 'இப்படி' சாப்பிட்டா போதுமாம்.. ட்ரை பண்ணி பாருங்க!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 114
உலகில் உடல் பருமனால் நிறைய பேர் கஷ்டப்படுகிறார்கள். உடல் எடையை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அதுவே உடலில் பல ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரித்து, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் இரண்டு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அவை உண்ணும் உணவில் கட்டுப்பாடு தேவை மற்றும் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பன தான்.
நீங்கள் அசைவ பிரியராக இருந்து, உடல் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? அதுவும் நீங்கள் சிக்கன் பிரியரா? உங்களால் சிக்கன் சாப்பிடாமல் இருக்க முடியாதா? அப்படியானால் சிக்கனை உட்கொண்டே ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்கலாம்.
ஆம், சிக்கனும் உடல் எடையைக் குறைக்க உதவி புரியும். ஏனெனில் சிக்கனில் கொழுப்புக்கள் குறைவு. ஆனால் அந்த சிக்கனை ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் தான் எடையைக் குறைக்க முடியும்.
சிக்கன் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?
சிக்கனில் லீன் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். மேலும் புரோட்டீன்களானது உடலில் உள்ள கொழுப்புக்களை திறம்பட கரைக்க உதவுகின்றன. அதுவும் சிக்கன் மூலம் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், நாட்டுக் கோழியைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதுவும் அந்த கோழியில் உள்ள முழு சத்துக்களைப் பெற, அவற்றை நெருப்பில் வாட்டியோ, சூப்பாக தயாரித்தோ தான் உட்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் எண்ணெயில் பொரித்த சிக்கனை அல்லது சில்லி சிக்கனை சாப்பிடக்கூடாது.
ஏனெனில் இவற்றில் கவோரிகள் அதிகமாக இருக்கும். எனவே சிக்கன் மூலம் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், அந்த சிக்கனை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு சமைத்து சாப்பிடுங்கள்.
1. மல்வானி சிக்கன் சுக்கா ரெசிபி
இந்த சிக்கனுக்கு தனியாக ஒரு மசாலாவை தயாரித்து செய்ய வேண்டும். இந்த மல்வானி மசாலா தனித்துவமான ப்ளேவரைக் கொண்டிருக்கும். முக்கியமாக இந்த மல்வானி சிக்கன் சுக்காவை செய்வது மிகவும் சுலபம். இந்த சிக்கன் ரெசிபிக்கு 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்தால் போதும்.
தேவையான பொருட்கள்:
* நாட்டுக்கோழி - 1/2 கிலோ
* வெங்காயம் - 4 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1
மல்வானி மசாலாவிற்கு...
* வரமிளகாய் - 12
* மல்லி விதை - 2 டீஸ்பூன்
* கிராம்பு - 4-5
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை ஏலக்காய் - 4-5
* கருப்பு ஏலக்காய் - 2-3
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கசகசா - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மல்வானி மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காய், வரமிளகாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். அதன் பின் சீரகம், மல்லி, கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வறுத்த பொருட்கள் அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பிறகு சிக்கனை கழுவி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, 15-20 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்துவிட்டால், அதை இறக்கி, மேலே எலுமிச்சை சாற்றினைப் பிழிந்தால், சுவையான மல்வானி சிக்கன் சுக்கா தயார்.
2. தயிர் சிக்கன் ரெசிபி
இந்த தயிர் சிக்கனுக்கு கொழுப்பு குறைவான தயிரை பயன்படுத்த வேண்டும். இந்த ரெசிபியில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருக்கும். தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம், மக்னீசியம் போன்றவை இருப்பதோடு, இது செரிமான மண்டலத்திற்கும் நன்மை விளைவிக்கக்கூடியது. இந்த தயிரைக் கொண்டு சிக்கனை சமைத்து சாப்பிடும் போது, உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
* நாட்டுக்கோழி - 1/2 கிலோ
* கொழுப்பு குறைவான தயிர் - 2 1/2 கப்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் தயிர், சீரகத் தூள், பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிக்கனை சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாயையும் சேர்த்து கிளறி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிக்கனை நன்கு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தயிர் சிக்கன் தயார்.
3. சிக்கன் ஷவர்மா
தற்போது மக்கள் மத்தியில் சிக்கன் ஷவர்மா பிரபலமாகவுள்ளது. நீங்கள் சிக்கன் ஷவர்மா பிரியர் என்றால், அந்த சிக்கன் ஷவர்மாவை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுங்கள். இந்த ஷவர்மா செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்கச் செய்து, எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
ஷவர்மாவிற்கு...
* மெல்லிய துண்டுகளாக வெட்டப்பட்ட சிக்கன் - 600 கிராம்
* கொழுப்பு குறைவான தயிர் - 1 கப்
* பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பட்டைத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 சிட்டிகை
* எலுமிச்சை - 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
சாஸ் செய்வதற்கு...
* கொழுப்பு குறைவான தயிர் - 1/2 கப்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* தஹினி - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் சாஸ் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக எடுத்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் ஷவர்மாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி 20 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு கோதுமை ஷவர்மா பிரட்டை எடுத்து, அதில் சாஸை தடவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சிக்கனை எடுத்து, அத்துடன் தக்காளி, வெங்காயம், பார்ஸ்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, பிரட்டிற்கு நடுவே வைத்து ரோல் போன்று சுற்றிக் கொண்டால், சுவையான சிக்கன் ஷவர்மா தயார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 சிக்கன் ரெசிபிக்களும் கொழுப்பு குறைவானவை மற்றும் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்கச் செய்து எடை இழப்புக்கு பெரிதும் உதவி புரியக்கூடியவை. எனவே நீங்கள் சிக்கன் சாப்பிட்டு எடையைக் குறைக்க விரும்பினால், இந்த மாதிரி சிக்கனை சமைத்து சாப்பிட்டு நன்மை பெறுங்கள்.