Switch Language:   English | தமிழ்

    சூரியன் பற்றிய சில சிறந்த தகவல்கள்.

    இவ்வுலகில் காணப்படும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலமாக விளங்குவது சூரியன். ஆகவே இன்று அறிவியல் அறிஞர்களின் கவனம் முழுவதும் சூரிய ஆற்றலின்பால் ஈர்க்கப் பட்டுள்ளது. கி.மு.212 இல் "ஆர்க்கிமிடிஸ்' நூற்றுக்கணக்கான ஆடிகளைப் பயன்படுத்தி சூரியனின் கதிர்கள் அனைத்தையும், கப்பலின் மீது குவியச் செய்து ரோமானிய கப்பல் படைக்குத் தீ வைத்தார். இவ்வாறு நடந்திருக்கக் கூடும் என்று நூறு ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய "ஜார்ஞூ பாஃபன்' கூறினார்.

    1695 இல் இத்தாலியரான "டார்ஜியானி அவரோனி' வைரமொன்றின் மீது சூரியக் கதிர்களை விழச் செய்து அதைப் பரிசோதனைக்கு உட்படுத்தி பிரித்தெடுத்து அழித்து கரியாக மாற்றினார். 1794 இல் "ஜோசப் பிரெட்லீ' பாதரச ஆக்சைடு மீது சூரியக் கதிர்களைப் பாய்ச்சி அதிக வெப்பத்திற்குள்ளாக்கி அதனின்றும் ஆக்ஸிஜன் வாயுவைப் பிரித்தெடுத்தார். ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாதது சக்தி /ஆற்றல். இதை நிலக்கரி, எண்ணெய், எரிவாயு முதலிய எரிபொருட்களிலிருந்து பெறுகின்றோம். இந்த சக்தியானது எந்திர சக்தி, வெப்ப சக்தி, ரசாயன சக்தி, ஒளி, ஒலி மற்றும் மின்சக்தி, அணுசக்தி போன்ற பல வகைகளில் நமக்குக் கிடைக்கிறது.அதிகரித்து வருகின்ற மக்கள் தொகையின் காரணமாக சக்தியின் தேவை பன்மடங்காக உயர்கிறது. ஆகவே நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் எரிபொருட்கள் விரைவில் தீர்ந்துவிடும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.இந்த நெருக்கடி ஒருபுறம் இருக்க, இவ்வகை எரிபொருளை பயன் படுத்துவதால் சூழ்நிலை சீர்கேடுற்று வாயுமண்டலத்திலும் நச்சுத் துகள்கள் பரவுகின்றன. அணுசக்தியைப் பயன் படுத்தி அளப்பரிய சக்தியைப் பெறலாம்; ஆனால் அதற்கு யுரேனியத்தை பூமியிலிருந்து தோண்டியெடுக்க வேண்டியுள்ளது. இதுவும் பற்றாக்குறையாகி விடலாம். மேலும் இதை உபயோகிக்கும் போது ஏற்படும் கதிரியக்கத்தாலும் பேரபாயம் விளையும்... எனவே இந்த எரிபொருட்களுக்கு பதிலாக வேறு எரிபொருட்களைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் விளைவாக, சூரிய சக்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் அறியமுடிகிறது.

    சூரிய ஆற்றலின் சிறப்பு:
    மற்ற எல்லா எரிபொருட்களில் இருந்து கிடைக்கும் சக்தியை விடக் கூடுதலாக 20,000 மடங்கு சக்தியை சூரியன் தினமும் பூமியின் மீது பொழிகிறது. ஒரு ஏக்கர் நிலத்திற்கு 4,000 குதிரைத்திறன் வேகமுள்ள சக்தி கிடைக்கிறது.சூரியன் ஒரு நட்சத்திரம். பூமியின் எடையை விட அதன் எடை 3,30,000 மடங்கு அதிகம். பூமியிலிருந்து 9,30,00,000 மைல்களுக்கு அப்பாலிருந்து சூரிய ஒளி பூமியை வந்து அடைகிறது. இது மின்காந்தக் கதிர்வீச்சாக அமைகின்றது. சூரியனின் மையத்தின் வெப்பநிலை & 3 கோடி டிகிரி பாரன்ஹீட். அதன் ஒளிவட்டத்தின் வெப்பம் 20 லட்சம் டிகிரி பாரன்ஹீட்; மேற்பரப்பு 10,000 டிகிரி பாரன்ஹீட்.நேரடியாக சூரியக் கதிர் விழும் ஒரு சதுர கெஜ பரப்பில் 2 குதிரைத் திறன் வேகமுள்ள கதிர்வீச்சு இருக்கும். பூமியை நோக்கி வரும் சூரிய சக்தியில் 30 சதவிகிதம் வாயு மண்டலத்தில் பட்டு உடனே பிரதிபலித்து திரும்பி விடுகிறது. 47 சதவிகிதம் வாயு மண்டலத்தினாலும் தரையினாலும் உறிஞ்சப்படுகிறது. சுமார் 33 சதவிகிதம் காற்றில் சலனத்தை உண்டு பண்ணுகிறது. இதைவிடக் குறைவான அளவு 4,000 கோடி கிலோவாட் சக்தியானது தாவரங்களின் ஒளிச் சேர்க்கைக்குப் பயன்படுகிறது. இந்த ஒளி எரிபொருட்கள் உற்பத்திக்குத் துணைசெய்கிறது. இந்த சூரிய சக்தியானது நமக்கு எல்லா இடத்திலும் இலவசமாகக் கிடைப்பதால் எரிபொருளை ஓரிடத்தில் இருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.சூரிய சக்தியைப் பயன்படுத்துதல்:

    சூரிய சக்தியைத் திறம்பட பயன்படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. சூரிய ஒளி பூமியின் மீது தொடர்ந்து விழுந்து கொண்டு இருந்த போதிலும், பூமியின் மீது ஒரே சீராக விழுவதில்லை. பூமியின் சுழற்சியும், மேகத் திரைகள் சூரிய ஒளியை மறைப்பதும் முக்கியக் காரணங்கள்! ஒரு சில விஞ்ஞானிகள் சூரிய சக்தியை பயன்படுத்த முயற்சி எடுத்து வரும் போது, பெரும்பாலோர் அக்கறை காட்டுவதில்லை. மரபுசார் எரிபொருட்களை உபயோகித்து எளிதாகக் கிடைக்கக் கூடிய மின்சக்தியை பயன்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இன்று சூரிய சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஆகும் செலவும் அதிகமாகவே உள்ளது.

    கடற்படையினருக்கு, குடிநீர் அகப்படாத போது, மீட்புப் படகில் கடல் நீரை காய்ச்சி வடிக்கும் கருவியொன்றை டாக்டர் மேரியா டெலக்ஸ் கண்டுபிடித்தார். சூரிய ஒளியையும், கதிர்வீச்சையும் நேரடியாகப் பயன்படுத்தி, எந்திர சக்தியாகவும், மின்சக்தியாகவும் மாற்றலாம் என்பதைக் கண்டுபிடித்தனர். ரஷ்யாவில் வறண்ட பிரதேசங்களின் பாசன வசதிக்கு நீர் கொண்டுவர பம்புகளை இயக்குவதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தி வெற்றியடைந்து இருக்கிறார்கள்.

    சகாரா பாலைவனத்திற்கு தென் பகுதியிலுள்ள பெரும் நிலப்பரப்பில் சுட்டெரிக்கும் சூரிய கிரகணங்களைப் பயன்படுத்தி பம்புகளை இயக்கி விரைவில் பாசன வசதி பெற முடியும் என்று கருதுகிறார்கள். ஆப்பிரிக்காவில் நேரடியாக எந்திர சக்தியாக சூரிய சக்தியை மாற்றி கிணறுகளிலிருந்து நீர் இறைத்து வருகின்றார்கள்.
    சூரிய அடுப்பு: இந்தியாவில் சூரிய சக்தியால் எளிய முறையில் இயங்கும் குக்கரை 1945 ஆம் ஆண்டே "எம்.கே. கோஷ்' அமைத்தார். எம்.எல். கன்னா என்பவர் நீரைக் காய்ச்சி வடிக்கும் வாலையைக் கண்டறிந்தார். சூரிய சக்தியால் இயங்கும் பலவகையான சூரிய அடுப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய ஒளிமூலம் கிடைக்கும் சக்தியில் 35 சதவிகிதம் நீர் கொதிப்பதற்கும், 20 சதவிகிதம் சமையல் பண்டங்களை வேக வைப்பதற்கும், 45 சதவிகிதம் வெப்பச் சலனத்தைக் கட்டுப் படுத்துவதற்கும் தேவைப்படுகிறது. ஒருவகை சூரிய அடுப்பில் பரவளைய ஆடியும், கெட்டிலும் பயன்படுகிறது. கெட்டிலின் அடிப்பகுதியில் சூரிய வெப்பத்தை ஆடியானது குவியச் செய்கிறது. இதனால் உருவாகிற வெப்பத்தைக் கொண்டு ஒரு லிட்டர் தண்ணீரை 15 நிமிடங்களில் கொதிக்க வைக்கலாம். புதிய தொழில்நுட்பத்தில் இவ்வகையான சூரிய அடுப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த அடுப்பானது அலுமினியமும், இரும்புச் சட்டமும் கலந்த கலவையாகும். ராக் பெல்லர் நிறுவன உதவித்தொகை கொண்டு பிளாஸ்டிக் சூரிய அடுப்பை விஸ்கோஸ் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 400 வாட் சக்தியைப் பெறலாம். இதனைப் பயன்படுத்தி நீரில் வேகவைத்தல், ஆவியில் வேக வைத்தல், வறுத்தல் ஆகிய சமையல் முறைகளைக் கையாளலாம்.
    வீடுகளுக்கு கதகதப்பு: ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலங்களில் வீடுகளுக்கு கதகதப்பைத் தர சூரிய ஆற்றலை பயன் படுத்துகின்றனர். இவ்வகை வீடுகளை அமைக்கும் முறை: வீட்டின் கூரையை சமதளமாக்கி, இதன் மேல் மட்டத்தில் சிறிதளவு நீர் நிரம்பக் கூடிய தொட்டியை அமைக்கவும். சூரிய வெப்பம் வெளியேறாதபடி தொட்டிக்கு காப்பிடவும். குளிர்காலத்தில் பகலில் இம்மூடி நகர்த்தப்படுகிறது. எனவே சூரிய வெப்பம் கிடைக்கிறது. தொட்டியிலுள்ள நீர் சூடாகிறது. இந்த நீரானது குழாய் ஒன்றின் வழியே செல்கிறது. இதனோடு இணைந்தவாறு காற்று சுற்றோட்டக் குழாய் உள்ளது. ஆகவே நீரிலுள்ள வெப்பத்தினால் காற்றில் சூடேறுகிறது. இவ்வெப்பக் காற்று வீட்டில் பரவுவதற்கு காற்றுச் செலுத்தி உண்டு. மேலும் சூரிய வெப்பமானது, கூழாங்கற்களாலான அடுக்கு விரிப்புகளிலோ, கிளாபர்ஸ் உப்பு எனப்படும் ரசாயனப் பொருட்களிலோ சேமிக்கப்படுகிறது.
    வீடுகளுக்கு குளிர்சாதனம்: வெப்ப நாட்களில் வீடுகளுக்கு குளிர்சாதன வசதியைப் பெறுவதற்கும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி வருகிறார்கள். வீடுகளில் கதகதப்பு உண்டாக வீடுகளில் கூரைகளில் அமைக்கின்ற அதே நீர்த் தொட்டியை வீட்டில் குளிர்சாதன வசதி பெறவும் பயன்படுத்தலாம். கோடைக் காலத்தில் இரவு நேரங்களில் நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதால் நீர் குளிர்ந்து வெப்பம் வெளியேறி வீட்டினுள் வெப்பம் குறைகிறது. பகலில் தொட்டியை மூடிவிட வேண்டும்.
    சூரிய சக்தியால் இயங்கும் குளிர்சாதன வசதியைக் கொண்டு பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்கள் விரைவில் புளித்தும், அழுகியும் போகாமல் பாதுகாக்கலாம். சாதாரண வீடுகளில் குளிர்சாதன வசதிக்காக அமோனியா திரவம் பயன்படுத்தப்படுகிறது. வெப்பச் சக்தியால் இயங்கும் எஞ்சினில் குளிர்சாதனத்தை இயக்க சூரிய சக்தியைப் பயன்படுத்தலாம். 1968 இல் அர்ஜென்டினாவில் "ஹெரால்டுஹே' என்பவர் குளிர்சாதன வசதியுள்ள மாதிரி வீட்டைக் கட்டினார். இம்முறையால் காற்றின் ஈரப் பதத்தை உறிஞ்சலாம்.
    நீர் சூடாக்கி:
    சூரிய வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்தி நீரைச் சூடாக்கலாம். பல நாடுகளிலும் இம்முறையானது கையாளப்படுகிறது. ஜப்பான், இஸ்ரேல் போன்ற நாடுகளில் இது பெருமளவு தயாரிக்கப்பட்டது. வீடுகளில் குளிப்பதற்கும், பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்வதற்கும் 135 டிகிரி பாரன்ஹீட் போதுமானது. காப்பிடப்பட்ட தொட்டிலில் நீரைச் சேமிக்கலாம்.

    நீர் சூடாக்கிகளில் பல வகை உண்டு. எல்லாவற்றிலும் கறுப்பு நிறமுள்ள பெரும்பரப்பில் சூரிய வெப்பம் தாக்கி, நீர் சூடாகிறது. பெரும்பாலும் நீர் சூடாக்கி கறுப்பு சாயம் பூசிய தொட்டியாக இருக்கும். நீர் சூடாக்கியிலிருந்து வெப்பம் வெளியேறாதபடி மூடி உண்டு. இந்த மூடியின் மூலம் சூரியக் கதிர்கள் உள்ளே செல்ல முடியும் ஆனால் எளிதில் வெளியே வர முடியாது.

    சூரிய உலைகள்:

    இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் அமைக்கப்பெற்ற சூரிய உலை தனிச்சிறப்பு வாய்ந்தது. இதிலிருந்து 75 கிலோவாட் சக்தி கிடைத்தது. சீனா களிமண் மற்றும் மண்பாண்டங் களுக்குப் பயன்படும் கலவைகளை உயர்ந்த வெப்பநிலைக்கு உள்ளாக்கி உருகச் செய்து அவற்றின் தனித் தன்மைகளைப் பற்றி ஆராய்வதற்கு சூரிய உலைகள் உதவுகின்றன. மிக உயர்ந்த வெப்பநிலைகளில் உருகக் கூடிய உலோகங்களை உருக்கவும், இவற்றைக் காய்ச்சிப் பிணைக்கவும், தொழில்துறை ஆராய்ச்சிக்கும் சூரிய உலைகள் பயன் படுகின்றன. சூரிய உலையிலிட்டு, உருக்குப் பாளத்தைக் கூட எளிதில் உருக்கி விடலாம்.

    சூரிய மின்கலங்களைப் பயன்படுத்துவதில் கடற்படையினர் கவனம் செலுத்தி வந்தனர். கடலில் மீட்பு மிதவைகளுக்கு சூரிய மின் கலங்களின் மூலம் விசை சப்ளை கிடைத்தது. விமானப் படையினர் சூரிய சக்தியால் இயங்கும் ரேடியோக்களைத் தயாரித்தனர். யுத்த காலத்தில் விமானப் படையினரை மீட்க இது பெரிதும் உதவியது. தரைப்படையினரின் தலைக்கவசங்களில் சூரிய சக்தியால் இயங்கும் வாக்கி & டாக்கி பொருத்தப்பட்டது.

    கலிபோர்னியா வளைகுடாவின் அடித்தரை மட்டத்தில் ஏற்படும் நில நடுக்கத்தைப் பதிவு செய்வதற்காக கடற்கரை நெடுகிலும் (பூமியதிர்வைப் பதிவு செய்யும்) கருவிகள் உள்ளன. இந்தக் கருவிகள் சூரிய சக்தியால் இயங்குபவையே!

    பெல் டெலிபோன் ஆய்வுக் கூடங்களில் ஒளி வோல்டா கலங்களின் மூலம் சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றும் ஆராய்ச்சி வெற்றியடைந்தது. சூரிய சக்தியால் இயங்கும் டெலிபோன் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சூரிய சக்தியால் இயங்கும் ரேடியோக்களும் உருவாக்கப் பட்டன. சூரிய வெப்பத்தினால் உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலின் மூலம் இயங்கக் கூடிய "பம்பு செட்" அமைக்கப் பட்டது.


    பெங்களூர் "பெல்" நிறுவனம், வீடுகளுக்கும், சிறிய கிராமங்களுக்கும், மருத்துவ மனைகளுக்கும் பயன்படும் வகையில் சூரிய வெப்பத்தால் இயங்கும் மின் உற்பத்தி சாதனங்களையும், மின் சேகரிப்பு பேட்டரிகளையும் கண்டு பிடித்துத் தந்தது.

    விண்வெளி ஆராய்ச்சியில் சூரிய ஆற்றலின் பங்கு:

    முதல் முதலில் சோவியத் யூனியன் ஸ்புட்னிக் எனும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய போது, அவை செயல்பட விசை தேவைப்பட்டது. அதற்கான சக்தியை சூரிய ஒளியிலிருந்து சூரிய மின்கலம் மூலம் பெற ஏற்பாடு செய்தனர். 1958 இல் வான்கார்டு செயற்கைக்கோள் விண்வெளியில் செலுத்தப்பட்டது. சூரிய சக்தியால் இயங்கும் டிரான்ஸ்மிட்டர் இயங்கியது.
    மிடாஸ், சமோஸ் போன்ற அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களில், அணுகுண்டு பரிசோதனை பற்றியும், பறக்கும் குண்டுகள் பற்றியும், அணுசக்தியால் இயங்கும் ஆயுதங்களைப் பற்றியும் அவ்வப்போது தகவல் அனுப்ப சூரிய மின்கலங்கள் அவசியமாயின.

    சந்திரனில் மனிதன் இறங்குவதற்கு முன் விண்வெளியில் வெகு உயரத்திற்கு பயோனிர் & 5 செலுத்தப்பட்டது. இதன் இரு புறங்களிலும் சூரிய மின்கலங்கள் பொருத்தப்பட்டன. 1960 இல் அனுப்பப்பட்ட "டெல்ஸ்டார்' எனும் செயற்கைக் கோள் முழுவதும் சூரிய சக்தியால் இயங்கியது.

    எனவே எதிர் காலத்தில் எல்லாச் சக்திக்கும் மிஞ்சப்போவது இந்த சூரிய சக்தி தான் என்பது திடமான உண்மை.