Switch Language:   English | தமிழ்

    சிதைக்கப்பட்ட ஒரு கருவின் முறைப்பாடு.

    அன்புள்ள உம்மா ! மன்னித்துக் கொள். ஆசையின் மோகத்தினால் அவ்வாறு அழைத்து விட்டேன். என்னை உனக்கு நினைவு இருக்காது. ஏனெனில் நீதான் கருவாக இருந்த என்னை சிசுவாகக் கூட ஏற்க மறுத்துவிட்டாய். ஆனால் உன்னை, உனது உணர்வுகளை நான் நினைவு வைத்திருக்கின்றேன். அனைத்துத் தாய்மார்களும் கருவுற்றிருந்தால் அடையும் களிப்புணர்வை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    உன்னையும் அவ்வாறுதான் நினைத்திருந்தேன், என்னை சுமையாக எண்ணாது சுகமாகக் கருதி ஈன்றெடுப்பாய் என்று. ஆனால் நான் உன் கருவில் தரித்த முதல் நாளே நீ முடிவெடுத்து விட்டாய் என்னை அழித்து விட வேண்டும் என்று. பரவாயில்லை நீதான் கருவறையின் சொந்தக்காரியாச்சே......

    கருவறை இருள் நிறைந்தது என்பதனால் யாரும் அதை வெறுப்பதில்லை. நானும் வெறுக்கவில்லை. ஆனால் நீயோ வெளிச்சத்தில் இருந்து கொண்டு என்னை வெறுத்து விட்டாய். என் தந்தை ஆசையோடு உன்னிடம் வந்து என்னைப் பற்றிக் கேட்கும் போதெல்லாம் நீயும் ஆசையோடு என்னைப் பற்றி, என்மேலுள்ள அக்கறை பற்றி கூறுவாய் என்று ஆவலாக உன் கருவறையினூடாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். ஆனால் நீயோ ஆசையோடு பேசிய வார்த்தைகளைக் காட்டிலும் ஆதங்கமாய் வீசிய வார்த்தைகளே என்னைச் சரணடையும். என் மீது சிறிதும் இரக்கமில்லாமல் இரத்தக் கட்டி என நினைத்து என்னைச் சிதைக்கத் துணிந்திருந்தாய். ஆனால் உன் கசப்பான வார்த்தைகளைக் கேட்டு உன்னால் சிதைக்கப்படும் வரை உயிருடன்தான் இருந்தேன் உம்மா.........

    கருச்சிதைவு செய்வது குற்றம் எனக் கூறும் சமயத்தில் இருந்து கொண்டு; கருச்சிதைவு செய்வது ஏற்றம் எனும் மேற்கத்தேய சிந்தனைக்கு அடிபணிந்து, நாகரீகத்தினை விரும்பி அநாகரீகமாய் என்னை வெறுத்து விட்டாய். உன் தாயின் கருவறையில் உனக்கு உணவளித்த இறைவன் எனக்கு உணவளிக்கும் போது...ஏனோ! எனக்கு புரியவில்லை. என்னால் உன் வாழ்வு இருளாகிவிடும் என்று என் வாழ்வை இருளாக்கிவிட்டாயே தாயே....அறியாமைக் காலத்தில் செய்த செயலை அறிவின் வளர்ச்சியிலும் அறியாமல் செய்து விட்டாயே. உயிர்களின் உலகமாகிய ஆலமுல் அர்வாஹ்வில் நாம் ஒன்றிணைந்திருந்த போது நீதான் என் தாய் என எண்ணியோ தெரியவில்லை நான் சற்று தொலைவிலேயே இருந்து விட்டேன்.

    உன்னிடம் நான் இறுதியாக ஒன்று கூறுகிறேன் கேள். வறுமைக்குப் பயந்தோ, சமூகத்திற்குப் பயந்தோ அல்லது நாகரீகத்திற்குப் அடிபணிந்தோ என்னை, என் உணர்வுகளைக் கொன்றது போன்று இனி எந்தக் கருவையும் சிதைத்து விடாதே. உனக்கும், எனக்கும், நம் அனைவருக்கும் உணவளிப்பவன் இறைவன் ஒருவனே என்பதையும் மறந்து விடாதே. இத்தனையும் நான் கூறுவது உனக்குக் கசப்பானதாக இருக்கலாம். ஏன் வருத்தமாகக்கூட இருக்கலாம். அப்படியானால் தயவு செய்து என்னை மன்னித்துக்கொள். ஆனால் அதில் உண்மை இருக்கிறது புரிந்து கொள்.......


    எஸ். எல். பாத்திமா சிபாயா. BA (Hons)
    தென்கிழக்குப் பல்கலைக்கழகம்