கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
- Imran
- Category: உடல் நலம்
- Hits: 163
மனித உடலில் மிகவும் முக்கியமான ஓர் உறுப்பு தான் கல்லீரல். தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் மது பழக்கம் பெருகியுள்ள நிலையில், பலரது கல்லீரலின் ஆரோக்கியம் மோசமாக உள்ளது. அதில் தற்போதைய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் அதிகம் பாதிக்கப்படுவது கல்லீரல் அழற்சி ஆகும்.
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 19 ஆம் தேதி உலக கல்லீரல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினத்தில் கல்லீரலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பலர் பரப்புவார்கள். கல்லீரல் அழற்சியால் 40-45 வயதிற்குட்பட்டவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். ஆனால் இன்று இளம் தலைமுறையினரும் அதிகம் கஷ்டப்படுகின்றனர். நமது உடலில் கல்லீரல் பல முக்கிய பணிகளைச் செய்கிறது. அதில் ஆல்கஹால் மற்றும் கொழுப்புக்களை வளர்சிதை மாற்றம் செய்வது, உடலில் கொழுப்புக்கள், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களின் அளவை சீராக்குவது, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை சேகரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. உலக கல்லீரல் தினமான இன்று கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்று காண்போம்.
பூண்டு
பூண்டில் உள்ள உட்பொருட்கள், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவும். பூண்டில் அல்லிசின் மற்றும் செலினியம் அதிகளவில் உள்ளது. இந்த இரண்டு உட்பொருட்களும் கல்லீரலை சுத்தமாக வைத்து, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கிரேப்ஃபுரூட்
கிரேப்ஃபுரூட்டில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளது. அதோடு சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவற்றிலும் இச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழங்களை தினமும் ஜூஸ வடிவில் எடுத்து வந்தால், அது கல்லீரல் நொதிகளின் உற்பத்தியை ஊக்குவித்து, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றும்.
பீட்ரூட் மற்றும் கேரட்
பீட்ரூட், கேரட் என்னும் இரண்டு காய்கறிகளிலும் தாவர வகை ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா-கரோட்டீன்கள் அதிகளவில் உள்ளது. இந்த காய்கறிகளை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது கல்லீரல் நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து, ஒட்டுமொத்த கல்லீரல் செயல்பாட்டையும் தூண்டும்.
பச்சை இலைக் காய்கறிகள்
கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுப் பொருட்களுள் பச்சை இலைக் காய்கறிகளும் ஒன்று. இவற்றில் உள்ள குளோரோபில், இரத்தக் குழாய்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். ஆகவே பாகற்காய், பசலைக்கீரை, கடுகு கீரை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அவகேடோ
அவகேடோ பழத்தை ஒருவர் சாப்பிட்டால், அது கல்லீரலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்றத் தேவையான க்ளுட்டாதியோன் என்னும் பொருளை உடலில் உற்பத்தி செய்ய உதவிடும். ஆகவே அவகேடோ மில்க் ஷேக்கை முடிந்தால், அடிக்கடி வாங்கிக் குடியுங்கள்.
ஆப்பிள்
ஆப்பிளில் உள்ள பெக்டின், உடல் மற்றும் செரிமான பாதையில் இருந்து வெளியேறும் டாக்ஸின்களை சுத்தம் செய்யத் தேவையான கெமிக்கலைக் கொண்டது. இந்த ஆப்பிளை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால், அது கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.