Switch Language:   English | தமிழ்

    700 KM ரயிலில் பயணித்து எஜமானைத் தேடிய நாய்...

    ஐயோ! உண்மையில் ஆச்சரியமான விடயம்தான். தன்னுடைய எஜமானை விட்டுப் பிரிந்த நாயொன்று ரயிலில் 700 கிலோமீற்றர் வரை பயணித்து அவரைக் கண்டுபிடித்த சம்பவமொன்று இத்தாலியில் நடைபெற்றுள்ளது.

     

    வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பிரசன்ன பெர்ணான்டோ, தனது வியாபார பயணத்துக்காக செல்லப்பிராணியான எலு என்ற நாய்க்குடிட்டியையும் அழைத்துக்கொண்டே செல்வது வழக்கம். இவ்வாறாக ஒரு நாள் வியாபாரத்துக்குச் செல்லும் போது தனது செல்லப்பிராணியை தவரவிட்டுச் சென்றுள்ளார் பிரசன்ன. பல மணித்திhயலங்கள் எலுவைத் தேடியும் கிடைக்காத பட்சத்தில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் இணையத்தளத்தினூடாகவும் நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.

    இதேவேளை, தன்னை 11 வருடங்களாகப் பாதுகாத்து வந்த எஜமானைக் காணாது தவித்த எலு, தனக்கு தினமும் பழக்கப்பட்ட ரயில் நிலையத்துக்குச் சென்று ரயிலிலும் ஏறியுள்ளது. வீட்டை நோக்கிப் புறப்படுகிறோம் என்ற எண்ணத்தில் எலு அந்த ரயிலில் ஏறிய போதிலும், அந்த ரயில் ரோம் நகரை நோக்கிப் பயணிக்கும் 'யூரோ ஸ்டார்' என்ற ரயில் என்பது எலுவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருக்கையொன்றிற்கு அடியில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரையில் பயணித்த எலு, பின்னர் ஒரு ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்றுள்ளது. இருப்பினும் அந்த ரயில் நிலையம் அமைந்துள்ள பிரதேசம் அதற்கு பழக்கப்பட்ட பிரதேசம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    அதனால் மீண்டும் ரயில் நிலையத்துக்குச் சென்று மற்றுமொரு ரயிலில் ஏறியுள்ளது. மீண்டும் தவறான ரயிலில் ஏறிய எலு, மற்றுமொரு ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளதுடன் அங்கிருந்த பெண்ணொருவருடன் நெருங்கியுள்ள நிலையில், அந்தப் பெண்ணின் வீட்டுக்கும் சென்றுள்ளது. தான் அழைத்து வந்த நாய், ஏதோவொரு சோகத்திலிருப்பதை அறிந்திருந்த மேற்படி பெண், ஒரு நாள் இணையத்தளத்தில் குறித்த நாய் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.

    இதன்மூலம், குறித்த நாய் தொடர்பான சகல விடயங்களையும் அறிந்துகொண்ட குறித்த பெண், தனது வாகனத்திலேயே எலுவை அழைத்துக்கொண்டு அதனது எஜமானின் வீட்டுக்குச் சென்று ஒப்படைத்துள்ளார். மஞ்சற் கடவையைத் தவிர்ந்த வேறு இடங்களில் வீதியைக்கூட கடக்க விரும்பாத தனது எலு, மஞ்சள், சிவப்பு, பச்சை நிறங்களை நன்றாக அறிவதாக பிரசன்ன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.