லீப் வருடத் திகதி : சில சுவாரஷ்யமான தகவல்கள்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 468
ஒவ்வொரு 4 வருடத்துக்கும் ஒரு முறை வரும் லீப் வருடங்களில் ஒன்றான 2016 ஆம் ஆண்டான இவ்வருடத்தில் மேலதிகமாக சேர்க்கப் படும் ஒரு தினத்தை அடுத்து ஏற்படும் பெப்ரவரி 29 தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு கூகுள் டூடுளில் அசை படம் சேர்த்து சிறப்பிக்கப் பட்டிருந்தது. லீப் வருடம் குறித்த சில முக்கிய தகவல்களைப் பார்ப்போம்.
நமது பூமி சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் 365.24 நாட்களாகும். ஆனால் இந்த 0.24 என்ற காலப் பகுதியை 4 வருடங்களுக்கு ஒரு முறை அண்ணளவாக ஒரு தினமாக கிரெகோரியன் நாட்காட்டி மூலம் சேர்க்கப் பட்டு வருவதே (0.96 அல்லது 1) நாம் பயன்படுத்தி வரும் லீப் வருடம் ஆகும். இத்தினம் 4 வருடங்களுக்கு ஒருமுறை பெப்ரவரியில் சேர்க்கப் பட்டாலும் ஏனைய மாதங்களை விடக் குறைவான நாட்களையே பெப்ரவரி கொண்டுள்ளது. அதாவது 30 அல்லது 31 ஐ அது எட்டுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஞ்ஞான ரீதியிலான அளவீடு வர முன்பே ரோமன் அரசர்களின் பிடிவாதத்தால் பெப்ரவரி மாதத்தில் 28 நாட்களே பாவிக்கப் பட்டு வந்துள்ளது.
இதேவேளை பெப்ரவரி 29 ஆம் திகதி லீப் தினமானது 5 ஆம் நூற்றாண்டு முதல் ஸ்காட்லாந்து மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள் தமது காதலை ஆண்களிடம் தெரியப் படுத்தும் தினமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். மறுபுறம் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை 100 இனால் பிரிக்கப் படும் அதேவேளை 400 இனால் பிரிக்கப் பட முடியா விட்டால் குறித்த வருடம் லீப் வருடமாகக் கருதப் படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது 2000 ஆம் ஆண்டு லீப் வருடமாகும். ஆனால் 1700, 1800 மற்றும் 1900 ஆகியவை லீப் வருடங்களாகக் கருதப் பட மாட்டாது.
பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகளில் லீப் தினத்தில் பிறக்கும் நபர்களுக்கு சட்ட ரீதியிலான பிறப்புச் சான்றிதழ் பதிவில் மார்ச் 1 ஆம் திகதியே பிறந்த தினமாகப் பதியப் படுவது வழக்கமாகும்.