Switch Language:   English | தமிழ்

    தவறு செய்யும் போது பிறர் வசை பாடுவதை ஏன் நமது மனம் ஏற்பதில்லை

    நம்மில் பெரும் பான்மையான மக்கள் மகத்தான காரியங்களைச் செய்யும் போது பிறரின் பாராட்டுக்களை ஏற்றுக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியுடன் நூற்றுக்கு நூறு விதம் உடன் படுவோம்.

    ஆனால் நம்மில் வெகு சிலரே சில வேளைகளில் நாம் செய்யும் காரியங்களில் தவறு நிகழ்ந்து விட்டால் பிறரின் வசை மொழிகள ஏற்றுக் கொள்வது வழக்கம். இந்த வேறுபாடு ஏன்? இதற்கான காரணத்தை லண்டனைச் சேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் விஞ்ஞானிகள் சிலர் சமீபத்தில் விளக்கியுள்ளனர்.

    அதாவது நாம் செய்யும் செயல்கள் எதிர்மறையான முடிவைத் தரும் போது நாம் அது குறித்து மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துவதாக கண்டறியப் பட்டுள்ளது. விரிவாக சொன்னால் மோசமான விளைவை ஏற்படுத்திய செயல்கள் குறித்த முடிவுகளை எடுப்பதில் சாதாரண செயல்களை விட நமது மூளை மிக அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால் நம்மில் பெரும்பான்மையினர் செயல்களுக்கான பொறுப்பினை உடனே ஏற்றுக் கொள்ள இணங்குவதில்லை. இதனால் தான் அனைத்துச் செயல்களையும் பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் தன்மை நம்மில் மிகச் சிலருக்கே வாய்த்திருக்கின்றது.

    இதனை விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பதற்கு தேர்ந்தெடுக்கப் பட்ட சிலரிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. இதன் போது அவர்கள் ஒரு பட்டனை அழுத்துமாறு கேட்டுக் கொள்ளப் பட்டதுடன் உடனடியாக ஒரு ஒலி அலை ஓடவிடப்பட்டது. பின்னர் அவர்கள் பட்டனை அழுத்துவதற்கும் ஒலி அலையைக் கேட்பதற்கும் இடையே எடுத்த நேரத்தைக் கணக்கிடுமாறு வேண்டப்பட்டது. இதன் போது ஒவ்வொரு தனிநபருக்கும் ஏற்ப ஆராய்ச்சியாளர்கள் பெற்ற முடிவு வேறுபட்டது. மேலும் இதன் மூலம் அவர்களின் செயல் நேர்மறையை விட எதிர்மறையாக இருக்கும் போது குறித்த நபர்களின் மூளை அதை உணர்ந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொண்டமை புலப்பட்டது.

    இந்த ஆராய்ச்சி முடிவை லண்டனில் உள்ள கானிட்டிவ் நரம்பியல் விஞ்ஞான பல்கலைக் கழகப் பேராசிரியர் பட்ரிக் ஹக்கார்ட் வெளியிட்டுள்ளார்.