Switch Language:   English | தமிழ்

    அமில மழை பொழிவதற்கான காரணம் என்ன என நீங்கள் அறிவீர்களா?

    சாதாரண மழையில் நாம் நனைந்திருப்போம், `ஜில்’லென்ற உணர்வை அனுபவித்திருப்போம். சில சமயங்களில் மழை பெய்யும்போது அதில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும். அந்த மழையை `அமில மழை’ என்கிறார்கள். சாதாரணமாகப் பெய்யும் மழையில் அமிலத்தன்மை மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால், வானவெளியில் உள்ள கரியமில வாயு மழைநீருடன் கலந்து வீரியமில்லாத கார்பானிக் அமிலமாக மாறிவிடுகிறது. அமில மழையிலோ, கந்தகமும், நைட்ரஜன் ஆக்சைடுகளும் கலந்துவிடுவதால் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலங்கள் உருவாகிவிடுகின்றன. அதை, `வீரியம் மிக்க அமில மழை’ என்கிறார்கள்.

    அமில மழை பொழிவதற்கான காரணம் என்னவென்று அறியலாம்…

    வானத்தில் சூழ்ந்திருக்கும் இயற்கை நிலைமைகள் பொதுவாக அமில மழைக்குக் காரணமாகின்றன. அத்துடன், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக்கின்றன. அடிக்கடி குமுறும் எரிமலைகளும், காடுகள் தீப்பிடிப்பதால் ஏற்படும் புகையும், மின்னல் மற்றும் திடப்பொருட்களின் நொதிவு ஆகியவையும் வானத்தில் வீரிய அமிலத் தன்மையை உண்டாக்குகின்றன. தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும், மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்வதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.


    நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்கு குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில் அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அமில மழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதியில் உள்ள மீன்கள் பெருமளவில் உயிரை இழக்கின்றன. அந்தப் பிரதேசங்களில் உள்ள சின்னஞ்சிறு உயிரினங்களும் அமில மழையால் உயிரிழக்க நேரிடுகிறது. சமீப காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அமில மழையால் தாவர இனங்களும் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.